‘டிஆர்பி ராஜா எனும் நான்’… ஆளுநர் மாளிகையில் அமைச்சராக பதவியேற்றார் ராஜா… எந்தத் துறை ஒதுக்கீடு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
11 May 2023, 11:02 am

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டிஆர்பி ராஜா அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பதவியேற்று இரண்டு ஆண்டுகள் முடிவடைந்து 3 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த இரண்டு ஆண்டு காலத்தில் அமைச்சரவையில் இலாக்காக்கள் மாற்றி அமைக்கப்பட்டும், புதிதாக ஒரு அமைச்சருக்கு வாய்ப்பும் வழங்கப்பட்டது.

ஆனால் தற்போது முதல் முறையாக அமைச்சரவையில் இருந்து ஒரு அமைச்சர் நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியானது. அந்த வகையில் திருவள்ளூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாசருக்கு பால்வளத்துறை ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது நாசர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு 3 முறை மன்னார்குடி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட டிஆர்பி ராஜாவிற்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில் டிஆர்பி ராஜா அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் டிஆர்பி ராஜாவுக்கு பதவி பிரமாணம், ரகசிய காப்பை ஆளுநர் ஆர்என் ரவி செய்து வைத்தார். தொடர்ந்து, ஆளுநர் அவருக்கு வாழ்த்துக்களை கூறினார்.

தற்போது முதலமைச்சரோடு சேர்த்து 35 பேர் அமைச்சர்களாக உள்ள நிலையில், மூத்த அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட இருப்பதாக கூறப்படுகிறது. புதிதாக அமைச்சரவையில் இணைந்துள்ள டிஆர்பி ராஜாவிற்கு தொழில் துறை மற்றும் முதலீடு ஊக்குவிப்பு துறை ஒதுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே தொழில்துறையில் இருந்த தங்கம் தென்னரசுவிற்கு நிதித்துறையும், நிதித்துறையை தன் வசம் வைத்திருந்த பிடிஆருக்கு தகவல் தொழில்நுட்ப துறையும் ஒதுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பால்வளத்துறையை மனோ தங்கராஜ் அல்லது வேறு ஒருவருக்கு ஒதுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

அமைச்சர் டிஆர்பி ராஜா பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பிறகு ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

  • AR Rahman Sons Defends his father against Rumours அப்பா குறித்து தப்பா பேசாதீங்க… ஏஆர் ரகுமான் மகன் போட்ட பதிவு!
  • Views: - 509

    0

    0