திமுக ஆட்சியில் பாலாறும், தேனாறும் ஓடும் என சொன்னார்கள் ; ஆனால் ஓடுவதோ கள்ளச்சாராய ஆறு…. ஆர்பி உதயகுமார் விமர்சனம்
Author: Babu Lakshmanan15 May 2023, 4:55 pm
தமிழகத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாலாறும், தேனாறும் ஓடும் என ஆட்சிக்கு வந்தது திமுக அரசு என்றும், பாலாறும், தேனாறும் ஓட வேண்டாம், கள்ளச் சாராய ஆறு ஓடுவதை தடுத்தாலே போதும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கீழப்புதூர் சந்தனமாரியம்மன் கோவில் முன்பு நகர் கழக அதிமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் திருத்தங்களை மேற்கொள்வதற்கான படிவங்களை கிளைச் செயலாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் பாலாறும் தேனாறும் ஓடும் என சொன்னார்கள் 520 வாக்குறுதிகளை கொடுத்தார்கள். ஆனால் இன்று கள்ளச்சாரயத்தால் பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளச்சந்தையில் விற்கப்படும் விஷ சாராயங்களால் உயிர் பலி ஏற்பட்டுள்ளது. 50 பேருக்கு மேல் ஆபத்தான நிலையில் இருப்பதாக செய்திகள் வருவது கண்ணீரை வரவழைக்கிறது.
10 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சி, நான்கரை ஆண்டு எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியின் போதும் கள்ளச்சாரயம் என்கிற வார்த்தையே தமிழகத்திலிருந்து ஒழிக்கப்பட்டு, நீக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று கள்ளச்சாராயத்தால் பெண்கள் உள்பட 10 பேர்கள் உயிரிழந்துள்ளனர். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், இதற்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.
இதை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே செல்லும் உழைக்கும் தோழர்கள் உயிரோடு திரும்பி வருவார்களா என்ற நிலை இருக்கிறது. மேலும், ஒரு லட்சம் கோடிக்கு மேல் ஆயத்தீர்வை கட்டாமல் இன்று கள்ளச்சந்தையில் மதுபானங்கள் டாஸ்மார்க்கில் விற்பனை செய்கின்றனர். அதனால் இன்று வரும் சரக்கின் தரம் என்னவென்று தெரியாத அளவிற்கு விற்பனை செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்படுகிறது. அது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.
அனுமதிக்கப்படாத பார்கள் மூலம் விற்கப்படும் சரக்குகள், கள்ளச் சாராயத்தின் மூலம் உயிர்பலி ஏற்படுகிற அபாயகரமான ஆபத்தான நிலை இன்று இருக்கிறது. அதை இரும்பு கரம் கொண்டு இந்த அரசு தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் பாலாறும் தேனாறும் ஓட வேண்டாம், கள்ளச் சாராயம் ஓடுவதை தடுக்க வேண்டும். முல்லை பெரியாறு அணையில் 152 அடி நீரை தேக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன் என பேசினார்.