காரில் வந்து செயினை பறிக்க முயன்ற சம்பவம்… குற்றவாளிகளுக்கு மாவுக்கட்டு போட்ட போலீசார்…!!
Author: Babu Lakshmanan17 May 2023, 10:15 am
கோவை ; நடைபயிற்சி மேற்கொண்ட பெண்ணிடம் செயினை பறிக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த கௌசல்யா என்ற பெண் நேற்று முன்தினம் காலை ஜிவி ரெசிடென்சி பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது, அவரை பின்தொடர்ந்து காரில் வந்த மர்ம நபர்கள் கௌசல்யாவின் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றனர். ஆனால், கௌசல்யா செயினை இறுக்க பிடித்துக் கொண்டதால் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு கீழே விழுந்தார்.
அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட சிங்காநல்லூர் காவல்துறையினர், சம்பவத்தில் ஈடுபட்ட சக்திவேல் மற்றும் அபிஷேக் என்ற இருவரை பிடித்து காரையும் பறிமுதல் செய்தனர்.
இதனைஅடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஏற்கனவே சில குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு இருந்தது தெரிய வந்தது. பின்னர் அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் உடல் பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
முன்னதாக, அவர்களை கைது செய்யும் போது போலீசாரிடம் இருந்து தப்ப முயற்சித்து ஓடிச் சென்றுள்ளனர். அப்போது, கால் இடறி விழுந்து இருவரின் கைகளும் உடைந்தாக கூறப்படுகிறது. இதையடுத்து, இருவரையும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மாவுக்கட்டு போட்டு விட்டுள்ளனர்.