அதிமுகவை தனிமைப்படுத்தும் நாடகமா?…திருமாவால் அரசியல் களம் பரபர…

Author: Udayachandran RadhaKrishnan
17 May 2023, 9:44 pm

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சமீப காலமாக அவ்வப்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பதுபோல் தெரிவிக்கும் கருத்துகள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது திமுக கூட்டணியில் அவருடைய கட்சி நீடிக்குமா? நீடிக்காதா? என்ற கேள்வியை எழுப்பி அரசியல் களத்தில் பெரும் சலசலப்பையும் ஏற்படுத்தி விடுகிறது.

இபிஎஸ் பக்கம் சாயும் திருமா

கடந்த மார்ச் மாத இறுதியில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றபோது, வாழ்த்து சொன்ன திருமாவளவன், அவரை ஆளுமை மிக்கவர் எனவும் புகழ்ந்தார்.

இது அப்போதே திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளால் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மறுவாரமே தனியார் டிவிக்கு அவர் அளித்த பேட்டியில் இன்னொருபடி மேலே சென்று எடப்பாடி பழனிசாமிக்கு வெளிப்படையாகவே தனது ஆதரவை தெரிவித்தார்.

வலிமையான எதிர்க்கட்சி தலைவர்

திருமாவளவன் கூறும்போது, “அவரது ஆளுமைதான் இன்றைக்கு அதிமுக பொதுச் செயலாளர் என்ற உயரத்திற்கு அவரை கொண்டு சென்றுள்ளது. எடப்பாடி பழனிசாமியை நான் குறைத்து மதிப்பிட மாட்டேன். ஜெயலலிதா என்ற மிகப்பெரிய ஆளுமை இல்லாதபோதும் கூட, 66 இடங்களில் வெற்றி பெற்று வலிமையான எதிர்க்கட்சியாக அதிமுகவை அமர வைத்துள்ளார்.

பாஜகவோ சமூக நீதிக்கு எதிரான ஒரு கட்சி. அப்படி ஒரு கட்சியுடன் அதிமுக கூட்டணியில் இருப்பது காலத்தின் நெருக்கடி என்றுதான் சொல்ல வேண்டும். அதேநேரம் பாஜகவில் இருந்து விலகும் துணிச்சல் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜவுக்காக அவர் காத்திருக்கவில்லையே. பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளிவந்தால் 2026 சட்டப் பேரவை தேர்தலில் அக்கட்சிக்கு நல்ல பலன் கிடைக்கும்” என்று அதிரடியாக கூறி தமிழக அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தினார்.

இபிஎஸ் உடன் இணைய தயார்!!

இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறிய திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசும்போது கள்ளச்சாராய் விவகாரத்தில் திமுக அரசு நடந்து கொண்ட விதத்தை மென்மையாக கண்டித்தார்.

“டாஸ்மாக் என்ற அரசு அனுமதி பெற்று இயங்கிக்கொண்டிருக்கிற கடைகள் இருக்கும்போதே, கள்ளச்சாராயம் இந்தளவுக்கு விற்கப்படுகிறது என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களை முதலமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்ச ரூபாயும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் இழப்பீடு வழங்க ஆணையிட்டு இருப்பது ஒரு விதத்தில் ஆறுதல் அளித்தாலும் கூட, இப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு காணவேண்டும்.

அரசு மதுவிலக்கு கொள்கையை தீவிரமாக நடைமுறைப்படுத்தாத வரை கள்ளச்சாராய விற்பனையை தடுக்க முடியாது. இதை அரசு கண்டும் காணாமலும் இருந்தால், அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அரசே மது வணிகத்தை அனுமதித்து நடத்துவது ஏற்புடையது அல்ல. எனவே, முதலமைச்சர் ஸ்டாலின் மாநிலத்தில் மதுவிலக்கை தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

இதற்கு முதல்கட்ட நடவடிக்கையாக, சிறப்பு உளவுப்பிரிவு குழு ஒன்றை அமைத்து இதுபோன்ற தொழில்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து, கைது செய்து அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்.

மதுவினால் கணவனை இழந்து விதவைகளாக வாழக்கூடியவர்களின் குடும்பத்தினரை அரசு தத்தெடுத்து, அவர்களுடைய பாதுகாப்புக்காக நிதியை ஒதுக்கீடு செய்து, அவர்களை பராமரிக்க முன்வர வேண்டும்.

நாங்கள் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறோம். தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி, மதுவை ஒழிப்பதற்காக எங்காவது போராட்டம் நடத்தி இருக்கிறாரா? இனி அவர் மதுவை ஒழிக்க போராட்டம் நடத்துவார் என்றால் அவரோடு சேர்ந்து நாங்களும்
குரல் கொடுக்க தயாராக உள்ளோம்” என்று குறிப்பிட்டார்.

எதிர்ப்பே தெரிவிக்காத கூட்டணி கட்சிகள்

அவர் கடைசியாக கூறிய கருத்து தமிழக அரசியல் களத்தை பரபரக்க வைத்துள்ளது. இதில் ஆச்சரியம் அளிக்கும் விஷயம் என்னவென்றால் திருமாவளவன் இப்படி கூறியது பற்றி திமுகவோ அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளோ இதுவரை எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்பதுதான்.

“திருமாவளவன் அண்மைக் காலமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாராட்டும் விதமாக பேசுவதும், மதுவை ஒழிக்க அவருடன் இணைந்து போராடத் தயார் என்பதும் விசிக, அதிமுக கூட்டணியை நோக்கி செல்லும் வாய்ப்பு உள்ளது என்று சொல்வதெல்லாம் அவரை வைத்து திமுக நடத்தும் திட்டமிட்ட நாடகமோ என கருதத் தோன்றுகிறது” என்று மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

திருமாவின் நாடகமா?

“ஏனென்றால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுடன் பாஜக கூட்டணி சேர்ந்து விட்டால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு
அது மிகப்பெரிய சவாலாக அமையும். 2019 தேர்தல் போல் 38 தொகுதிகளில் வெற்றி பெறுவதும் கடினம்.

மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ள நிலையில் போதைப் பொருள் நடமாட்டம், அன்றாடம் நடக்கும் கொலை, கொள்ளை சம்பவங்கள், சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு, திமுக நிர்வாகிகள், பேரூராட்சி தலைவர்கள், வார்டு கவுன்சிலர்களின் அத்து மீறல்கள், நில அபகரிப்பு, அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், பொதுவெளியில் பெண்களைப் பற்றிய அவர்களின் நக்கல் பேச்சுகள், கடுமையான சொத்து வரி, மின் கட்டண உயர்வு போன்றவை தமிழக மக்களிடம் திமுக அரசு மீது ஏற்படுத்தியுள்ள அதிருபதி தேர்தலில் வெளிப்படும் வாய்ப்புகளே அதிகம்.

இதில் தற்போது விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தவறியதும் திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளது.

திருமாவை வைத்து காய் நகர்த்தும் திமுக?

இதனால் என்னதான் பெண்களுக்கு சாதாரண நகரப் பேருந்துகளில் இலவச பயணம், அரசு கல்லூரிகளில் படிக்கும்2 லட்சம் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, வறுமை நிலையில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய், தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கு 2000 ரூபாய் என்று கொடுத்தாலும் கூட அது திமுகவுக்கோ, அதன் கூட்டணி கட்சிகளுக்கோ பெரிய அளவில் சாதகமான நிலையை ஏற்படுத்தி விடாது. அதிமுக-பாஜக கூட்டணி சரி பாதி இடங்களை கைப்பற்றி விடும் வாய்ப்பு உள்ளது என்பதையும் மறுக்க முடியாது.

அதேநேரம் அதிமுக- பாஜக கூட்டணி அமைவதை தடுத்து விட்டால் 39 தொகுதிகளையும் நாம் எளிதில் கைப்பற்றி விடலாம். மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தால் நமக்கு வலுவான இலாகாக்களும் கிடைக்கும் என்று திமுக தலைமை கருதுவது போல் தெரிகிறது.

அதனால்தான் திருமாவளவனை நடுநிலையாளர் போல, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சமீப காலமாக அடிக்கடி பேச விட்டு பாஜக கூட்டணியில் இருந்து அதிமுகவை பிரிக்க முயற்சிக்கிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது. இதை உண்மை என்று எடப்பாடி பழனிசாமி நம்பி பாஜகவை கைவிடும்போது திருமாவளவன் தனது நிலைப்பாட்டில் இருந்து பின் வாங்கி, “எங்களது ஒரே எதிரியான பாஜக மத்தியில் ஆட்சி அமைத்து விடக்கூடாது என்பதற்காக திமுக கூட்டணியிலேயே விசிக நீடிக்கும்” என்று அவர் கடைசி நேரத்தில் அறிவிக்கவும் செய்யலாம். எனவே இதில் அதிமுக மிகுந்த உஷாராக இருக்கவேண்டும்.

ஏனென்றால் திருமாவளவன் 2024 தேர்தல் பற்றி பேசாமல் 2026 தமிழக தேர்தல் தொடர்பாக பேசும்போது மட்டும்தான் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை பாராட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனப்புழுக்கத்தில் திருமா!!

தவிர திமுக கூட்டணியை விட்டு 2024 தேர்தலுக்கு முன்பாகவே வெளியேறுவேன் என்று எங்குமே திருமாவளவன் மறைமுகமாக கூட இதுவரை கூறவில்லை. அரசியல் என்பது ஒரு சூழ்ச்சிக்களம். அதில் வெற்றி பெற எந்த எல்லைக்கும் அரசியல்வாதிகள் செல்லத் தயங்குவதில்லை. அதில் இதுவும் கூட ஒன்றாக இருக்கலாம்.

அதேநேரம் தென்னிந்தியாவில் பட்டியலின மக்களின் ஏகோபித்த ஒரே தலைவர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு வரும் திருமாவளவன் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்களின் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரம் கடந்த டிசம்பர் மாதம் 26 ம் தேதி வெளியுலகுக்கு தெரிய வந்த பின்பு இந்த விஷயத்தில் திமுக அரசின் மீது கடுமையான கோபத்தில் இருப்பதையும் உணர முடிகிறது.

காரணம், பட்டியலின மக்களுக்கான போராட்டத்தை தமிழகம் முழுவதும் தீவிரமாக நடத்த முடியாத அளவிற்கு விசிகவின் கைகள் கட்டி போடப்பட்டுள்ளன. இதனால் திருமாவளவன் பெரும் மனப்புழுக்கத்தில் இருக்கிறார் என்பதும் தெரிகிறது.

அரசியலில் எதுவும் நடக்கலாம்

மேலும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட விசிகவுக்கு ஒரு இடம் தான் கிடைக்கும் என்று கூறப்படுவதால் 2019 தேர்தலைப் போல அதே இரண்டு எம்பி தொகுதிகளை பெறுவதற்காக அதிமுக கூட்டணி பக்கம் சாய்ந்து விடுவதுபோல போக்கு காட்டினால் திமுக தனக்கு தொகுதிகளை குறைக்காது என்று கருதிக் கூட திருமாவளவன் இதுபோல் கூறி இருக்க வாய்ப்பும் உள்ளது. அதாவது எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கிற மாதிரி நடித்து திமுக கூட்டணியில் தனது நிலையை வலுப்படுத்திக் கொள்ளலாம் என்பது விசிகவின் சாதுர்ய திட்டமாக இது இருக்கலாம்” என்று அந்த மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

அரசியலில் எதுவும் நடக்கலாம்! இதுதான் நடக்கும் என்று யாராலும் உறுதியாக கணிக்க முடியாது என்பது உண்மைதான்!

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 391

    0

    0