முதலமைச்சர் ஸ்டாலினாலேயே அது முடியாது… திமுக கூட்டணி கட்சிகள் சந்தேகம் தான் ; ஜான் பாண்டியன் கணிப்பு..!!
Author: Babu Lakshmanan20 May 2023, 11:14 am
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால் மட்டுமே மரக்காணம் போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும் என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் உள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சம்பவத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் இழிநிலையை காட்டுகிறது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும். அரசால் தான் அதனை செய்ய முடியும். ஆனால் சாராய ஆலைகள் நடத்துபவர்கள் அரசிற்கு நெருங்கியவர்களாக இருக்கிறார்கள்.
பூரண மதுவிலக்கு வேண்டி பொதுமக்கள் வீதியில் இறங்கி போராடினால் மட்டுமே மதுவிலக்கு சாத்தியமாகும். அது போன்ற நிலைக்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் துணை நிற்கும். ஆளுங்கட்சியோடு கூட்டணியில் உள்ள கட்சிகள் அரசின் இதுபோன்ற மரக்காணம் போன்ற சம்பவங்களை எதிர்த்து கேள்வி கேட்க விமர்சனம் செய்ய தயங்குகின்றனர். பதவியை நோக்கியே அரசியல் நகர்கிறது. தமிழகத்தில் ஓட்டு அரசியலே நடைபெறுகிறது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் தமிழக முதலமைச்சரை பதவி விலக சொல்வது சரியல்ல. இது போன்ற சம்பவங்களுக்கு பதவி விலக வேண்டுமானால் தமிழகத்தில் எந்த முதலமைச்சரும் பதவியில் தொடர முடியாது. கூட்டணி கட்சியாக இருந்தாலும் தவறு செய்தால் தாமாக கேள்வி கேட்கும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கேள்வி கேட்க தயங்குகிறது. வேங்கை வயல் உள்ளிட்ட சம்பவங்களில் கீழ்மட்ட அதிகாரிகளே தண்டிக்கப்பட்டுள்ளனர். யார் தவறிழைத்தார்கள் என்பது அங்குள்ள காவல் துறையினருக்கு தெரியும். ஆனால் அரசு நடவடிக்கை எடுக்க தயங்குகிறது.
பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில காலங்கள் இருக்கிறது. தற்போதைய கூட்டணி குறித்து முடிவு செய்ய முடியாது. இருந்த போதிலும் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்கிறோம். ஆளும் கட்சி கூட்டணியில் உள்ள கட்சிகள் தொடர்ந்து அதே கூட்டணியில் நீடிக்குமா என்பது கடைசி நேரத்தில் தான் தெரிய வரும். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் யார் பிரதமர் என்று சொல்ல முடியாத நிலையில் உள்ளது. ஸ்டாலினும் தங்களது கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்ல முடியாது.
பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக மோடியே தொடர்கிறார். இதன் மூலம் எதிரியே இல்லாத ஆட்சியை அவர் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டும் மோடியே பிரதமராக வெற்றி பெறுவார் என்று தெரிவித்தார்.
மேலும் ஸ்டெர்லைட் சம்பவத்தை பொறுத்த வரை ஒரு லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். 13 பேர் சுடப்பட்டு இறந்த சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பிறகு தாமிரத்தை நாம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம். சில அமைப்புகளின் தூண்டுதலாலேயே இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். மற்ற நாடுகளில் தொழிற்சாலைகளை வரவேற்கிறார்கள். தமிழகத்தில் தான் தொழிற்சாலைகளை வெளியேற்றும் நிலை நடைபெறுகிறது. ஆலையை திறப்பதற்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆதரவு அளிக்கிறது. கடந்த ஆட்சியிலும் கள்ள சாராயம் கஞ்சா விற்பனை நடைபெற்றது. இந்த ஆட்சியில் விற்பனை அதிகமாக நடைபெறுகிறது, என்றார்.