நாம் அன்றாடம் சமைக்கக்கூடிய சாம்பார், புளி குழம்பு, கருவாட்டு குழம்பு, வத்தல் குழம்பு போன்ற குழம்புகளில் சேர்க்கக்கூடிய மாங்காய் அனைத்து நாட்களிலும் நமக்கு கிடைப்பதில்லை. மாங்காய் கிடைக்கக்கூடிய பருவத்தில் அவற்றை உப்பு வத்தலாக வீட்டிலேயே தயாரித்து சேமித்து வைத்துக் கொண்டால் மாங்காய் கிடைக்காத காலங்களில் இந்த வத்தலை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த உப்பு மாங்காய் வத்தல் எளிமையாக வீட்டிலேயே செய்வது எப்படி என்று இங்கே பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
மாங்காய்—— 2 kg
உப்பு ———— 100 g
செய்முறை: மாங்காயை நன்றாக கழுவி அதன் காம்பை வெட்டி விடவும். மாங்காயில் இருக்கக்கூடிய பாலை சுத்தமாக வெளியே எடுக்க வேண்டும். இந்த மாங்காயை உங்களுக்கு போதுமான அளவில் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். ஒரு சுத்தமான பாத்திரத்தில் இந்த மாங்காய் துண்டுகளை போட்டு அதில் நாம் வைத்திருக்கக்கூடிய உப்பை போட வேண்டும்.
உப்பு நன்றாக மாங்காய் துண்டுகளுடன் கலக்குமாறு பாத்திரத்தை மூடி நன்கு குலுக்க வேண்டும். இதனை மூடியபடியே 24 மணி நேரம் காற்று போகாமல் வைத்திருக்க வேண்டும். இப்போது இந்த பாத்திரத்திற்குள் சிறிது உப்பு நீர் வடிந்திருக்கும்.
இப்போது பாத்திரத்தில் உள்ள மாங்காய் துண்டுகளை மட்டும் தனியாக எடுத்து வெயிலில் காய வைக்க வேண்டும். பாத்திரத்தில் இருக்கும் உப்பு நீரை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். இரவில் காயவைத்த மாங்காய் துண்டுகளை எடுத்து மீண்டும் உப்பு நீர் இருந்த அதே பாத்திரத்தில் போட்டு வைக்க வேண்டும்.
உப்பு நீரில் போட்டு வைப்பதால் பூச்சிகள் மற்றும் வண்டுகள் போன்றவை மாங்காய் வத்தலை பாதிக்காமல் இருக்கும். இவ்வாறு மூன்று நாட்களுக்கு தொடர்ந்து செய்யும்போது உப்பு நீர் வற்றிவிடும். இருப்பினும் மாங்காய் வற்றலாக மாறும் வரை தொடர்ந்து வெயிலில் காய வைக்க வேண்டும். சுமார் ஆறு முதல் ஏழு நாட்களில் மாங்காய் துண்டுகள் வற்றலாக மாறிவிடும்.
இந்த வற்றலை காற்று புகாத ஒரு கண்ணாடி பாத்திரம் அல்லது பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். காற்றுப் புகாமல் இருப்பதால் பூச்சிகள் மற்றும் வண்டுகள் இந்த வத்தலை பாதிக்காமல் இருக்கும். இப்போது மாங்காய் வற்றல் தயார். இதனை ஒரு ஆண்டுகள் வரை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த மாங்காய் வற்றலில் உப்பு அளவு சற்று அதிகமாக இருப்பதால், பயன்படுத்தும் போது சிறிது தண்ணீரில் கழுவிக் கொள்வது நல்லது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.