தனியார் பேருந்துடன் நேருக்கு நேர் மோதிய வேன்… 23 பேருக்கு என்னாச்சு? நெல்லையில் பயங்கர விபத்து!!!
Author: Udayachandran RadhaKrishnan20 May 2023, 5:37 pm
நெல்லை புதிய பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு முக்காணி நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது.
நெல்லை கிருஷ்ணாபுரம் அருகே உள்ள ஆட்சி மடம் அருகே சென்று கொண்டிருந்தபோது ராமநாதபுரத்தில் இருந்து ஒரு குடும்பத்தினர் வேனில் திருச்செந்தூர் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு விருதுநகரில் ஒரு கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக நெல்லை வந்து கொண்டிருந்தனர்.
ஆட்சி மடம் அருகே வரும் போது பேருந்தின் முன்பக்க டயர் வெடித்தது. இதில் நிலை தடுமாறிய பேருந்து எதிரே வந்த வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் வேனின் முன் பகுதி முழுவதும் சேதம் அடைந்தது. பேருந்து வேனில் மோதிய வேகத்தில் சாலையில் இருந்து பள்ளத்தில் இறங்கி நின்றது . இரு வாகனத்திலும் வந்தவர்களும் விபத்தில் காயம் அடைந்தனர். விபத்தை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் தகவல் அறிந்து வந்த போலீசாரும் மீட்பு பணியில் ஈடுபட்டு விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். வேனை ஓட்டி வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த பழனி செல்வம் என்பவரை அப்பகுதி மக்கள் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்பு வேனில் இருந்து வெளியே எடுத்தனர்.
பின்னர் மீட்கப்பட்ட 29 பேரையும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து நடந்த இடத்தில் கண்ணாடி துகள்கள் சாலை முழுவதும் சிதறி கிடந்ததுடன், நெல்லை – திருச்செந்தூர் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது . இந்த விபத்து குறித்து சிவந்திபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.