குழந்தை படுத்திருந்த மெத்தையில் சுருண்டு தூங்கிய நல்ல பாம்பு : கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த திக் திக் சம்பவம்!!
Author: Udayachandran RadhaKrishnan21 May 2023, 6:23 pm
குழந்தையை படுக்க வைத்திருந்த பெட்டுக்கு அடியில் இருந்த பாம்பால் பெற்றோர் அச்சமடைந்தனர்.
கோவை மாநகர் போத்தனூர், குறிச்சி ஆகிய பகுதிகளில் தற்போது அடிக்கடி பாம்புகள் போன்ற விஷ ஜந்துகள் அதிகமாக தென்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன் போத்தனூர் பகுதியில், பூந்தொட்டிக்கு அடியில் ஒரு நாகப்பாம்பு பிடிபட்டது.
அதனைத் தொடர்ந்து மழையில் ஒரு வெள்ளை நிற நாகம் பிடிப்பட்டது. அப்பகுதியில் அடிக்கடி பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் இருப்பதால் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் படி கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் போத்தனூர் பகுதியில் ஒரு வீட்டில் குழந்தையை தரையில் போட்டிருந்த பெட்டில் படுக்க வைத்து விட்டு குழந்தையின் தாயார் பெட்டை சிறிது இழுத்துள்ளார்.
அப்போது பெட்டிற்கு அடியில் இருந்து பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தாயார் குழந்தையை உடனடியாக அங்கிருந்து எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
பின்னர் அக்கம்பக்கத்தினர் வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளைக்கு தகவல் அளித்து, அங்கு வந்த பாம்புபிடி வீரர் மோகன் லாவகமாக அந்த பாம்பை பிடித்து வனப்பகுதியில் விடுவித்தார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ள நிலையில், மாநகராட்சி நிர்வாகம் அப்பகுதியில் உள்ள பாம்புகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளனர்.