புதிய பிசினஸில் இறங்கிய நடிகர் அஜித்… வெளியான பரபரப்பான தகவல் ; பைக்குகளை தயார் செய்யும் ரசிகர்கள்..!!
Author: Babu Lakshmanan22 May 2023, 2:15 pm
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான துணிவு திரைப்படம், சக்கை போடு போட்டது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
பைக் ரேஸில் ஆர்வமிக்க நடிகர் அஜித், வழக்கமாக, ஒரு படத்தை நடித்து முடித்து விட்டால், பைக் ரைடிங் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இவர், கடைசியாக வெளிநாடுகளில் பைக் ரைடு செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகியது.
இந்த நிலையில், AK மோட்டோ ரைடு என்ற பெயரில் மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கினார் நடிகர் அஜித்குமார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- வாழ்க்கை ஒரு அழகான பயணம். அதன் எதிர்பாராத தருணங்கள், திருப்பங்கள் மற்றும் திறந்த பாதைகளைக் கொண்டாடுங்கள்’. இந்த மேற்கோளை நான் நீண்ட காலமாக விரும்பி வாழ்ந்து வருகிறேன். மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வெளிப்புறங்களில் எனது ஆர்வத்தை ஒரு தொழில்முறை முயற்சியாக மாற்றும் விதத்தில் ஏகே மோட்டோ ரைடு (AK Moto Ride) என்ற மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை கொண்டு வந்திருக்கிறேன் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தியா மட்டுமின்றி, சர்வதேச சாலைகளிலும் பயணம் மேற்கொள்ள ஆர்வமுள்ள ரைடர்ஸ், சாகச ஆர்வலர்கள் மற்றும் பயண விரும்பிகளுக்கு ஏகே மோட்டோ ரைடு சுற்றுப்பயணங்களை வழங்கும். நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்து சாகச சுற்றுலா சூப்பர் பைக்குகளை ஏகே மோட்டோ ரைடு நிறுவனம் வழங்கும்.
தொழில்முறை வழிகாட்டிகள், மோட்டார் சைக்கிள் சுற்றுப்பயணங்களின் நுணுக்கங்களை நன்கு அறிந்தவர்கள் மற்றும் உள்ளூர் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் பற்றிய விரிவான அறிவைக் கொண்டவர்கள் தொடக்கம் முதல் இறுதி வரை ரைடர்களுக்கு தடையற்ற மற்றும் அதிவேக அனுபவத்தை வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அஜித்குமாரின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, பைக்கர்களுக்கும் குஷியை ஏற்படுத்தியுள்ளது.