கார்ப்பரேட்டுகளின் கையில் தமிழக அரசு சிக்கி தவிக்கிறதோ…? விவசாயிகளுக்கு எழுந்த அச்சம் ; பிஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு…

Author: Babu Lakshmanan
22 மே 2023, 4:41 மணி
Quick Share

கார்ப்பரேட்டுகளின் கையில் தமிழக அரசு சிக்கி தவிக்கிறதோ? என விவசாயிகளிடையே அச்சம் எழுந்துள்ளதாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர்.பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் தமிழ்நாடு முழுமையிலும் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மூலம் தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்புச் சட்டம்.2023யை திரும்ப பெற வலியுறுத்தி கோரிக்கை மனு அனுப்ப முடிவு எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீயயிடம் மனு அளித்தனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த பிஆர் பாண்டியன் கூறியதாவது :- தமிழக அரசு கார்ப்பரேட்டுகளின் கையில் சிக்கி தவிக்கிறது. தமிழக முதலமைச்சருக்கு தெரியாமலே பல சட்டங்கள் நிறைவேற்றப்படுவதாகவும், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பரவலாக பேச்சு அடிபடுகிறது. இதனை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.

தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு விரோதமாக விலை நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் அபகரித்து கொள்கிற நிலையில், அவர்களுக்கு விளைநிலங்களை கையகப்படுத்தி கட்டுமான பணி மேற்கொள்வதற்கு இடையூறாக இருக்கிற நீர் நிலை பாதைகள், ஏரிகள், குளம், குட்டை உள்ளிட்ட நீர் நிலைகள் அனைத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அபகரித்துக் கொள்கிற அடிப்படையில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டம்தான் தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 இதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

இந்த சட்டம் முழுமையும் உலக பெரும் முதலாளிகளிலும் வற்புறுத்தலால் தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. குறிப்பாக உலக அளவில் பின்பற்றக்கூடிய 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, எட்டு மணி நேர உறக்கம் என்ற அந்த கொள்கை முறையும் தான் சட்டமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு அதற்கான சட்ட வழிமுறைகள் இல்லாத நிலையில், ஒரு உலகளாவிய ஒப்பந்தத்திற்கு தமிழ்நாடு அரசு கார்பரேட்டுகளுக்காக 12 மணி நேர வேலை என்பதை சட்டத்தை அவசர கோளத்தில் நிறைவேற்றியுள்ளது.

அதேபோல, அதைப் பின்பற்றி விலை நிலங்களை எல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்கள் அபகரித்து கொள்ளலாம். அதற்கு இடையூறாக இருக்கிற ஏரிகள், குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளையும் அவர்களே ஆக்கிரமித்துக் கொள்ளலாம். அபகரித்துக் கொள்ளலாம். அதன் மீது சாலைகள் போடலாம். ஒட்டுமொத்தமாக தமிழகத்தையே கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடகு வைக்கிற சட்டமாக கொண்டு வந்திருக்கிற தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு மூலமாக கார்ப்பரேட் கையில் அடிமைப்பட்டு கிடைக்கிறதோ என அஞ்ச தோன்றுகிறது.

உடனடியாக இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். திரும்ப பெறுவதற்கு முதல்வர் மறுத்தால் அதனுடைய எதிர் விளைவுகளை திராவிட முன்னேற்றகழகம் சந்திக்க நேரிடும். தமிழ்நாட்டில் இதுவரையிலும் 27 மாவட்டங்களில் விவசாய சங்க நிர்வாகிகள் இந்த கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் வாயிலாக தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்வதற்கு கொடுத்துள்ளனர். உடனடியாக திரும்ப பெற வேண்டும். தமிழக முதல்வர் இதற்கு மறுப்பு தெரிவித்தால், தமிழக ஆளுநரை சந்தித்து இந்த சட்டத்திற்கு அனுமதி கொடுக்கக் கூடாது. அப்படி அனுமதி கொடுக்கப்பட்டிருந்தால், அதனை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துவோம், என பேட்டியளித்தார்.

  • Manickam Tagore விஜய்யால் கட்சியின் கூடாரம் காலியாகிறதா? காங்கிரஸ் தலைவர்கள் அடுத்தடுத்து பதில்!
  • Views: - 315

    0

    0