ஓபிஎஸ் தொகுதி பக்கமே போறது இல்ல.. கேரளாவுக்கு ஆயில் மசாஜ் செய்ய போயிட்டாரு : தங்கத் தமிழ்செல்வன் விமர்சனம்!
Author: Udayachandran RadhaKrishnan24 May 2023, 3:54 pm
தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்கதமிழ்ச் செல்வன் போடியில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், வரும் ஞாயிற்றுக்கிழமை போடியில் ரூ 100 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள முல்லை பெரியாறு- கொட்டக்குடி கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ பெரியசாமி ஆகியோர் போடிக்கு வருகை தருகிறார்கள். இந்த திட்டத்தின் மூலம் தேனி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்கள் குடிநீர் பிரச்சினையில் தன்னிறைவு அடையும்.
போடி சட்டசபை உறுப்பினர் என்ற அடிப்படையில் ஓபிஎஸ்ஸுக்கும் அழைப்பு விடுக்கப்படும். அவர் வருவதும் வராமல் இருப்பதும் அவருடைய தனிப்பட்ட விருப்பம். போடி எம்எல்ஏவாக வெற்றி பெற்ற பிறகு அவர் எத்தனை முறை தொகுதிக்கு போய் மக்களை சந்தித்துள்ளார்? அவர் போவதே இல்லை.
ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட்டு தோற்று போன நான் அடிக்கடி தொகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிகிறேன். அவர்கள் சொல்லும் குறைகளை அமைச்சர்களுக்கு கூறுவேன்.
மேலும் அந்த தொகுதியில் தமிழக அரசு திட்டங்கள் சரியாக மக்களை சென்றடைகிறதா என்பதையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
15 ஆண்டுகளாக அமைச்சராக இருந்த ஓபிஎஸ் போடிக்கு எந்த ஒரு திட்டங்களையும் கொண்டு வரவில்லை.
தற்போது அவர் கேரளாவில் ஆயில் மசாஜ் எடுத்து வருகிறார். கொட்டக்குடி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட ரூ 500கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த பணிகள் விரைவில் தொடங்கும் என தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்திருந்தார்.
அது போல் என்றாவது ஓபிஎஸ் தொகுதியில் இருந்து பார்த்திருக்கிறார்களா. ஆனால் தோற்ற நான் கடந்த 2 வருஷமாக இங்கு வந்து செல்கிறேன். அது போல் தேனி மாவட்டத்திற்கு உணவு பூங்கா வர போகிறது.
முதல்வர், துணை முதல்வர், அமைச்சர், எம்எல்ஏ என பதவிகளை வகித்த ஓபிஎஸ் ஏன் இதுவரை எந்த நலத்திட்டங்களையும் கொண்டு வரவில்லை என தங்கதமிழ்ச் செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.