மதுரை – சிங்கப்பூர் நேரடி விமான சேவை..? சிங்கப்பூர் உள்துறை அமைச்சருடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு
Author: Babu Lakshmanan25 May 2023, 10:46 am
சிங்கப்பூர் உள்துறை அமைச்சருடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
புதிய முதலீடுகளை ஈர்க்கவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வருவதற்காக 9 நாட்கள் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதற்கட்டமாக சிங்கப்பூர் சென்றுள்ள அவர், சிங்கப்பூரில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அதனை தொடர்ந்து சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இணைய பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்துதல், உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடன் கலந்துரையாடினார். அந்த சமயம், சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கு நேரடி விமான சேவை தொடங்க முதல் அமைச்சரிடம் சண்முகம் கோரிக்கை வைத்தார்.
இதனை கேட்ட முதலமைச்சர் ஸ்டாலின், இது தொடர்பாக மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று கூறியதுடன், சென்னையில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க சண்முகத்திற்கு அழைப்பு விடுத்தார்.
சிங்கப்பூர் பயணத்தை நிறைவு செய்யும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஜப்பான் புறப்படுகிறார்.