யாருக்கும் அதிகாரம் கிடையாது… இது அதிகார பலத்தையும், பண பலத்தையும் வெளிக்காட்டுகிறது : ஜிகே வாசன் கண்டனம்!!

Author: Babu Lakshmanan
26 May 2023, 10:00 pm

ஆளுங்கட்சியினர் வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்துவது ஏற்புடையது அல்ல என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரணம்பேட்டையில் உள்ள அருள்மிகு கூப்பிடு பிள்ளையார் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் வருகை தந்தார். சுவாமி தரிசனம் முடிந்தபின் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது :- வருமான வரித்துறை சோதனை என்பது புதிதல்ல. வழக்கமான ஒன்றுதான். ஆளுங்கட்சியினர் அதிகாரிகள் மீது தாக்குதலில் ஈடுபடுவது ஏற்புடையது அல்ல.

ஆளுங்கட்சியினரின் பணபலமும், அதிகார பலமும் வெளிவருவதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆதாரங்களின் அடிப்படையில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களை தடுக்கவோ அவர்கள் மீது தாக்குதல் நடத்துவோ யாருக்கும் அதிகாரம் இல்லை. உண்மை நிலை என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

முதல்வரின் மலேசியா சுற்றுப்பயணம் வெறும் விளம்பரத்திற்காக மட்டும் இருக்கக் கூடாது. தமிழகத்தில் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் இருக்க வேண்டும். காரணம்பேட்டை அருகே பத்தாண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வராமல் உள்ள பேருந்து நிலையத்தை ஜவுளி பூங்காவாக மாற்றி அமைக்க வேண்டும். முறையான சட்ட விதிகளை பின்பற்றி இயங்கும் கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்கினால் மட்டுமே கட்டுமான தொழில் வளர்ச்சி அடையும், எனவும் தெரிவித்தார்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?