CM ஸ்டாலினும் சிறை செல்வார் : கொளுத்தி போட்ட ஜூனியர் கிருஷ்ணசாமி!
Author: Udayachandran RadhaKrishnan28 May 2023, 7:57 pm
தமிழக மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கும் கடந்த மாதம் 15 ம் தேதி முதல் நடந்து வரும் மோதல் உச்ச கட்டத்தை எட்டி இருக்கிறது.
தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பதுபோல
கிருஷ்ணசாமியின் மகன் ஷியாமும் தற்போது செந்தில் பாலாஜிக்கு சவால் விடுக்கும் வகையில் பேசி வருவதால் அரசியல் களம் அனல் பறக்கிறது.
ஆளுநரிடம் பரபரப்பு புகார்
கடந்த 15-ம் தேதி சென்னையில் பேரணி நடத்தியதுடன் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை டாக்டர் கிருஷ்ணசாமி நேரில் சந்தித்து டாஸ்மாக் மதுபான விற்பனையில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விரிவான புகார் மனுவை அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதில், ‘டாஸ்மாக் கொள்முதல் செய்யும் மதுபானங்களில், 60 சதவீத அளவிற்கு மட்டும்தான் ஆயத்தீர்வை விதிக்கப்படுகிறது. 40 சதவீதத்துக்கு ஆயத்தீர்வை விதிக்கவில்லை. டாஸ்மாக் நிறுவனத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது’ என்று குற்றம்சாட்டி இருந்தார்.
கிருஷ்ணசாமி மீது வழக்கு
இதனால் அதிர்ச்சி அடைந்த அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் கிருஷ்ணசாமி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுபற்றி டாக்டர் கிருஷ்ணசாமி, கூறும்போது “நாங்களும் நீதிமன்றத்தை நாட உள்ளோம். முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுமானால் செந்தில் பாலாஜியை இன்னும் கொஞ்ச நாள் அமைச்சரவையில் வைத்துக் கொள்ளட்டும். ஆனால் அவருக்கும் ஆபத்து வரும் என்பதை விரைவில் ஸ்டாலின் தெரிந்து கொள்ளவார்’’ என்று அதிரடி காட்டினார்.
ஐடி ரெய்டு
இந்த நிலையில்தான் கரூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட 40 இடங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக ரெய்டு நடத்தினர்.
சோதனைக்கு சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள் நான்கு பேர் திமுகவினரால் கடுமையாக தாக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் தற்போதும் சிகிச்சையில் உள்ளனர்.
தப்ப விடக்கூடாது
இதற்கு கண்டனம் தெரிவித்த டாக்டர் கிருஷ்ணசாமி “கரூரில் வருமானவரித்துறை அதிகாரிகள் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவங்கள் அனைத்திற்கும் செந்தில் பாலாஜியை முழுப் பொறுப்பாக்கி அவர் கைது செய்யப்பட வேண்டும். அதுவே சட்டத்தின் ஆட்சியின் சாட்சியாகும். தப்பு செய்தவர்கள் தண்டனை பெற்றே தீர வேண்டும். கடந்த இரண்டு வருடத்தில் டாஸ்மாக் மற்றும் மின்சாரத் துறையில் அவர் அடித்த கொள்ளைக்குத் தண்டனை பெறுவதிலிருந்து செந்தில் பாலாஜி இனி ஒரு கணமும் தப்பிக்க முடியாது; தப்பிக்கவும் விடக் கூடாது” என்று காட்டமாக கூறி இருக்கிறார்.
கொளுத்தி போட்ட ஜூனியர் கிருஷ்ணசாமி
இதற்கிடையே அவருடைய மகனும் புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவருமான ஷியாம் கிருஷ்ணசாமி, சங்கரன்கோவிலில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசும்போது டாஸ்மாக் விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கும், மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் எச்சரிக்கை விடுக்கும் விதமாக சில கருத்துகளை தெரிவித்து இருக்கிறார். அது திமுகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது.
அவர் கூறுகையில், “தமிழக ஆளுநரிடம் செந்தில் பாலாஜியின் முழு ஊழல் தகவல்களையும் சமர்ப்பித்து இருக்கிறோம். தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வரும் சட்ட விரோத பார்களை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டியும் உள்ளோம். ஒவ்வொரு பெரிய நகரங்களிலும் 100, 120 பார்கள் என சட்ட விரோதமாக செயல்பட்டு வருகின்றன. இந்தப் பார்களை இப்போதுதான் சோதனை செய்து அனுமதி வாங்கி இருக்கிறார்களா? இல்லையா?… என்பதை கண்டறிந்து சட்டவிரோதமாக இயங்கும் பார்களை மூடத் தொடங்கி இருக்கின்றனர்.
மக்கள் மது அருந்தும்போது, அது சட்டவிரோதமாக செயல்படும் பார்களா? அல்லது உரிமம் பெற்று இயங்கும் பார்களா? என்பதுகூட தெரியவில்லை. மதுபானங்களை குடிப்பவர்கள் அது தரமானதா? அல்லது சட்டவிரோதமாக வந்த மதுபானமா? என்பதும் தெரியாமல் குடிக்கின்றனர்.
விழுப்புரம், செங்கல்பட்டு, தஞ்சை மாவட்டங்களில் மதுவால் உயிரிழந்த 25 பேரின் இறப்பிற்கு பின்பு அவர்களின் குடும்பங்களை அமைச்சர் நேரில் சென்று பார்த்தாரா, இல்லையே?…
ஸ்டாலினும் சிறைக்கு செல்வார்
டாஸ்மாக் ஊழல்களை மறைப்பதற்காகவே இந்த கள்ளச்சாராய உயிரிழப்புகள் நடந்திருக்கலாம். இந்த ஊழல் விவகாரம் திமுக அரசுக்கு எதிராக திரும்பி விடக்கூடாது என்பதற்காக 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக அளிக்கப்பட்டு உள்ளது. இதுவும் கூட
கண் துடைப்புக்காக கொடுக்கப்பட்ட நிவாரணம் போல்தான் தெரிகிறது. ஏனென்றால் பட்டாசு விபத்து மற்றும் சாலை விபத்துகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு இதுபோல் எந்த நிவாரணமும் வழங்கப்படுவது இல்லை. அதற்காக போராட வேண்டிய நிலைதான் இருக்கிறது.
எனவே கள்ளச்சாராய உயிர் இழப்புகளுக்கு பொறுப்பேற்று அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி விலகவேண்டும். இல்லையென்றால் முதலமைச்சர் அவரை நீக்கவேண்டும். தொடர்ந்து அவரை அமைச்சரவையில் வைத்திருந்தால், செந்தில் பாலாஜி மட்டும் சிறைக்கு செல்ல மாட்டார். அவர் தன்னுடன் ஸ்டாலினையும் கூட்டிக்கொண்டுதான் செல்வார்.
ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் ஆதாரங்களை ஆளுநரிடம் நாங்கள் கொடுத்துள்ள நிலையில், அந்த பட்டியலைப் பார்த்துவிட்டு கூட வருமான வரித்துறையினர் இந்த சோதனைக்கு வந்திருக்கலாம்” என்று குறிப்பிட்டார்.
தீவிரவாதிகளா? ரவுடிகளா?
வருமான வரித்துறை அதிகாரிகளின் வாகனங்கள் தாக்கப்பட்டது தொடர்பாக அவர், கூறும்போது, “இந்த செயல் மிகவும் கண்டனத்துக்குரியது. கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், எங்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு குறித்து முன்னதாகவே கூறவில்லை என்று கூறுகிறார். முன்பே தகவல் தெரிவிக்கவில்லை என்றால் திமுகவினர் வருமான வரித்துறை அதிகாரிகளை இப்படித்தான் தாக்குவார்களா? அவர்கள் என்ன தீவிரவாதிகளா? அல்லது ரவுடிகளா?…”என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
வருமானவரித்துறை அதிகாரியிடம் உங்களுடைய அடையாள அட்டையை காட்டுங்கள் என்று அவரை பொது வெளியில் ஏராளமானோர் கூட்டமாக சூழ்ந்து கொண்டு கேட்பதற்கு எந்த உரிமையும் கிடையாது. அது அவர்களை பணி செய்ய விடாமல் தடுக்கும் அச்சுறுத்தும் செயல் ஆகும். சோதனை நடத்தச் செல்லும்போது சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் மட்டுமே அடையாள அட்டையை காட்டுங்கள் என்று கேட்க முடியும். எனவே இதில் வருமான வரித்துறையின் பெண் அதிகாரியை 50க்கும் மேற்பட்டோர் வீட்டுக்கு வெளியே முற்றுகையிட்டு அடையாள அட்டையை காட்ட சொன்ன நிகழ்வு திமுகவினருக்கு சட்ட சிக்கலை ஏற்படுத்தக் கூடும்.
“தமிழக அமைச்சர்களில் தற்போது அதிகாரபலம் மிக்கவராக செந்தில் பாலாஜி இருக்கிறார். அவர் எடுக்கும் முடிவுகளை முதலமைச்சரும் அப்படியே ஆதரிப்பது போல்தான் தெரிகிறது” என்று மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
“டாஸ்மாக் கடைகளில் கரூர் கம்பெனி என்ற பெயரில் ஒரு பாட்டிலுக்கு விற்பனையாளர் பத்து ரூபாய் கூடுதலாக கேட்பதாக ஒரு வருடத்திற்கும் மேலாக அதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்து வந்தன. ஆனால் அப்படியெல்லாம் நடக்கவில்லை. ஒரு சில கடைகளில் கூடுதலாக பத்து ரூபாய் கேட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று வாய்மொழியாக ஊடகங்களில் செந்தில் பாலாஜி தெரிவித்தாரே தவிர தனது துறையின் சார்பில் அதை அதிகாரப் பூர்வ உத்தரவாக பிறப்பிக்கவில்லை.
ஆனால் கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் விஸ்வரூபம் எடுத்த பிறகு மிக அண்மையில்தான் அதை உத்தரவாகவே பிறப்பிக்கிறார். இதிலிருந்தே பத்து ரூபாய் விவகாரம் தனது அமைச்சர் பதவிக்கு வேட்டு வைத்து விடும் என்பதை செந்தில் பாலாஜி புரிந்து கொண்டிருப்பதுபோல் தெரிகிறது. இதை ஆரம்பத்திலேயே தனது துறையின் மூலம் உறுதிப்படத் தெரிவித்திருந்தால் அவர் மீதான ஊழல் புகார் பிசுபிசுத்து போயிருக்கவும் வாய்ப்பு உண்டு.
பிடிஆர்-ஆல் சிக்கிய திமுக?
அதேநேரம் அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ வெளியான பின்பு செந்தில் பாலாஜி மீதான சந்தேகம் வருமானவரித் துறையினருக்கு வலுத்திருக்கலாம். ஏனென்றால் ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கும், மகனும் அமைச்சருமான உதயநிதிக்கும் முப்பதாயிரம் கோடி ரூபாயை குறுக்கு வழியில் விரைவாக சம்பாதித்துக் கொடுக்கவேண்டும் என்றால் அது டாஸ்மாக் மூலம் மட்டுமே நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை வருமானவரித் துறையினர் நிச்சயம் மோப்பம் பிடித்து இருப்பார்கள்.
ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய், சட்டவிரோத மதுபார்கள் மூலம் வருமானம், மது ஆலைகளில் இருந்து கொள்முதல் செய்யப்படும் மதுபானங்கள் 50 சதவீதம் வரை கணக்கில் வராமல் பார்களில் விற்பனை ஆகியவற்றின் வழியாக இரண்டு ஆண்டுகளில் இந்த பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் நிறைய உண்டு.
ஆனாலும் செந்தில் பாலாஜி மீது இது தொடர்பான வழக்கு வருமா?
அப்படியே வழக்குப்பதிவு செய்யப்பட்டாலும் விசாரணை எவ்வளவு காலம் நடத்தப்படும் என்ற கேள்விகள் எல்லாம் இதில் எழும்.
இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி வசமாக சிக்கிக் கொண்டாலும் கூட முதலமைச்சர் ஸ்டாலினும் அவருடன் சிறைக்கு செல்வார் என்று கூறப்படுவதெல்லாம் மிகப் படுத்தப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது” என்று அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.