பூக்களால் வடிவமைக்கப்பட்டுள்ள தல தோனியின் ஜெர்சி… பூங்காவில் கேக் வெட்டி கொண்டாடிய சுற்றுலா பயணிகள்..!!
Author: Babu Lakshmanan29 May 2023, 1:28 pm
கொடைக்கானல் பூங்காவில் பூக்களால் வடிவமைக்கப்பட்டுள்ள தல தோனியின் ஜெர்சியின் முன்பு நின்று சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மலர் கண்காட்சியுடன் கோடை விழா 26ஆம் தேதி துவங்கி நடந்து வருகிறது. சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல்வேறு வகையிலான மலர்களை கொண்டு விலங்குகள் உருவங்கள், பொம்மை உருவங்கள் வைக்கப்பட்டு இருந்தது. இதனை காண பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். மேலும், இவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.
சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் தல தோனியின் ஜெர்சி பூக்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பூக்களால் ஆன ஜெர்சியின் முன்பு நின்று சிறுவர்கள், பெண்கள் என அனைவரும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து செல்கின்றனர். மேலும், கொடைக்கானலுக்கு வந்த சில சுற்றுலா பயணிகள், ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை அணி வெற்றி பெற வேண்டும் என ஜெர்சி முன்பு நின்று கேக் வெட்டி கொண்டாடினர் .
மேலும், மலர் கண்காட்சியை பார்வையிட வந்த சுற்றுலா பயணிகளுக்கு கேக் வழங்கினர். கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பூக்களால் ஆன தல தோனியின் ஜெர்சி அனைவரையும் கவர்ந்து வருகிறது. இன்று நடக்கும் ஐபிஎல் இறுதி போட்டியில் வெற்றி பெற வேண்டும் என சுற்றுலா பயணிகள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.