CSK வெற்றிக்கு பாஜக காரியகர்த்தா ஜடேஜா தான் காரணம் ; திமுக vs பாஜக மோதல்… அமைச்சருக்கு அண்ணாமலை பதிலடி..!!

Author: Babu Lakshmanan
30 May 2023, 2:37 pm

அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் குஜராத் அணியை தோற்கடித்து சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைபட்ட போது, மோகித் ஷர்மா முதல் 4 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். கடைசி இரு பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜடேஜா அடுத்தடுத்து சிக்சர் மற்றும் பவுண்டரி அடித்து அணியை த்ரில் வெற்றி பெறச் செய்தார். இதன்மூலம், சென்னை அணி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

சென்னை அணியின் வெற்றியையைடுத்து தோனி மற்றும் ஜடேஜாவை வாழ்த்தி அரசியல் பிரபலங்கள் சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “மஞ்சள் படையினரின் இந்த வரலாற்று வெற்றியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. தல தோனி தலைமையில் ஒவ்வொரு சிஎஸ்கே வீரரும் இந்த மகத்தான வெற்றிக்குப் பங்களித்துள்ளனர். உண்மையான தலைவரின் கீழ் இருக்கும் ஒரு அணி, எந்த எதிரியையும் வெல்ல முடியும் என்று விளையாட்டை விரும்புபவர்கள் அனைவரும் நம்பினர்.

TRB Raja - Updatenews360

அவர்கள் எவ்வளவு வலிமையானவர்கள் என்று சித்தரிக்கப்பட்டாலும் குஜராத் தோற்கடிக்கப்படும். கடந்த காலங்களில் பல குஜராத்துகளை நாங்கள் தோற்கடித்துள்ளோம். ஒரு அணியாக எப்படி விளையாட வேண்டும் என்பதை உலகிற்குக் காட்டியது சென்னை சூப்பர் கிங்ஸ். சென்னையை எப்போதும் நம்புவோம்,” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அண்ணாமலை அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது :- சிஎஸ்கே அணிக்காக வின்னிங் ரன் அடித்தது பாஜக காரியகர்த்தா, ஜடேஜா ஒரு பிஜேபி காரியகர்த்தா. அவரது மனைவி பாஜக எம்எல்ஏ, ஜடேஜா குஜராத்தை சேர்ந்தவர், தமிழனாக பெருமைப்படுகிறேன். அதே நேரத்தில் சிஎஸ்கே அணியை விட குஜராத் அணியில் தமிழர்கள் அதிகம் பேர் உள்ளனர். 96 ரன் அடித்தது ஒரு தமிழர் அதையும் கொண்டாடுகிறேன்.

annamalai - Updatenews360

சிஎஸ்கே அணியில் ஒரு தமிழர் கூட ஆடவில்லை. ஆனாலும் சிஎஸ்கேவை கொண்டாடுகிறோம். ஏன் என்றால் தோனிக்காக, நேற்றைய போட்டியில் கடைசியில் வின்னிங் ரன் அடித்து சென்னை அணியை வெற்றி பெற வைத்தது பாஜக காரியகர்த்தா என்பதில் பெருமைப் படுகிறோம். அதே தான் 2024ம் ஆண்டு நடைபெறும். இதனை டிஆர்பி ராஜா புரிந்து கொள்ள வேண்டும்,” என தெரிவித்தார்.

அப்போது, கிரிக்கெட்டிலும் அரசியல் வந்துவிட்டதாக நெறியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, கிரிக்கெட்டை அரசியலில் தொடர்புபடுத்தி நீங்கள் கேள்வி கேட்டதால், நான் அதற்கேற்றவாறு பதிலளிக்க வேண்டியதாயிற்று எனக் கூறினார். இதனை கேட்டு நெறியாளரும் அமைதியாகி விட்டார்.

  • sai abhyankkar is the music director for allu arjun atlee project அட்லீ-அல்லு அர்ஜுன் படத்துக்கு இவர்தான் மியூசிக்கா? பிளாஸ்ட்டா இருக்கே!