அவங்க ஓகே சொன்னா போதும்… டெல்லி சென்று போராட்டம் நடத்த தயார் ; காத்திருக்கும் விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு!!
Author: Babu Lakshmanan2 June 2023, 1:45 pm
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் முடிவை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்த தயாராக இருப்பதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டுவது உறுதி என்று கர்நாடக மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான டிகே சிவகுமார் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்த 10 நாட்களுக்குள் வெளியிட்ட இந்த அறிவிப்பு தமிழக விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனிடையே, பல்வேறு விவகாரங்களுக்கு டெல்லி சென்று போராட்டம் நடத்திய தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.அய்யாக்கண்ணு, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அமைதி காப்பது ஏன்..? என்று சமூக வலைதளங்களில் எழுப்பினர்.
இது தொடர்பாக அய்யாக்கண் கூறியதாவது :- மேகதாதுவில் அணை கட்டப்படும் என கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. ஏற்கெனவே தமிழகத்தில் 30 லட்சம் ஏக்கராக இருந்த சாகுபடி பரப்பு தற்போது 20 லட்சம் ஏக்கராக குறைந்து விட்டது. தற்போது அங்கு அணை கட்டினால் தமிழகம் பாலைவனமாக மாறிவிடும்.
இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் சென்று தமிழக அரசு தீர்வு காண வேண்டும். பல முறை டெல்லியில் விவசாயிகளுடன் சென்று போராடினேன். தற்போது டெல்லிக்கு செல்ல என்னை அனுமதிப்பதில்லை. போராட்டம் அறிவித்தாலே வீட்டுச் சிறையில் வைத்து விடுகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியின்போது அக்கட்சி பாஜகவுடன் கூட்டணியில் இருந்ததால் என்னை தடுத்தனர். ஆனால், பாஜகவுக்கு எதிர்ப்பு நிலையில் உள்ள திமுக அரசு ஏன் என்னை தடுக்கிறது என தெரியவில்லை. தமிழக காவல் துறை அனுமதித்தால் மேகேதாட்டுவுக்கு எதிராக டெல்லி சென்று போராடத் தயாராக உள்ளேன், என்றார்.