அடிக்கடி ஏப்பம் வந்து டார்ச்சர் பண்ணுதா… இந்த மாதிரி சாப்பிட்டா அதிலிருந்து ஈசியா தப்பிக்கலாம்!!!

Author: Hemalatha Ramkumar
4 June 2023, 6:49 pm

வயிறு அல்லது உணவுக்குழாயில் சேமிக்கப்பட்ட வாயு வாய் வழியாக வெளியிடப்படும் ஒரு செயல் முறையே ஏப்பம் என்று அழைக்கப்படுகிறது. அதிகப்படியான காற்று அல்லது வாயு செரிமான அமைப்பில் தேங்கி விடும்பொழுது, ஏப்பம் மூலமாக அது வெளியிடப்படுகிறது. இது ஒரு இயல்பான செயல்முறை தான் என்றாலும், ஒரு சிலருக்கு அடிக்கடி ஏப்பம் வரக்கூடும். இது சங்கடத்தையும் வலியையும் உண்டாக்குகிறது.

ஒருவேளை உங்களுக்கு அதிகப்படியான ஏப்பம் வந்தாலோ அல்லது தொடர்ச்சியாக எந்த ஒரு உணவை சாப்பிட்டாலும் ஏப்பம் வந்தாலோ அதனை தவிர்ப்பதற்கான ஒரு சில குறிப்புகளை இப்பொழுது பார்க்கலாம்.

கார்பன் கலந்த பானங்களான சோடா மற்றும் ஸ்பார்க்லிங் வாட்டர் போன்றவை கார்பன் டை ஆக்சைடு வாயுவை கொண்டிருக்கிறன. இது ஏப்பத்தை தூண்டக்கூடிய ஒன்றாகும். ஆகவே முடிந்த அளவு கார்பனேற்றப்பட்ட பானங்களை தவிர்ப்பது நல்லது.

உணவை மிக விரைவாக சாப்பிட்டாலோ அல்லது பானங்களை அதிவேகத்தில் பருகினாலோ இது ஏப்பத்தை ஏற்படுத்தும். உங்கள் உணவை மெதுவாகவும், நன்றாக மென்று கூழாக்கி விழுங்குங்கள். அதேபோல தண்ணீரை மெதுவாக பருகும் பழக்கத்திற்கு வாருங்கள். இது ஏப்பத்தை தடுப்பதற்கான ஒரு டிப்ஸ்.

சுவிங்கம் சாப்பிடுவது அல்லது லாலிபாப் போன்றவற்றை சப்பி சாப்பிடுவது போன்ற செயல்முறைகளை செய்யும் பொழுது நாம் நம்மை அறியாமலேயே காற்றை விழுங்கி விடுகிறோம். இது அதிகப்படியான ஏப்பத்தை உண்டாக்கும். ஆகவே முடிந்த அளவு லாலிபாப் மற்றும் சுவிங்கம் போன்றவற்றை தவிர்க்கவும்.

பீன்ஸ், முட்டை கோஸ், வெங்காயம் மற்றும் ஒரு சில மசாலா பொருட்கள் செரிமான அமைப்பில் வாயுவை உண்டாக்கும் இதன் காரணமாக ஏப்பம் வரலாம். ஆகவே ஏப்பத்தை அதிகரிக்க கூடிய உணவுகளை உங்கள் டயட்டிலிருந்து தவிர்க்கவும்.

நீங்கள் உணவு சாப்பிடும் பொழுது சரியான தோரணையில் அமர்ந்து சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சாய்ந்தவாறு உணவு சாப்பிடுவதும் சாப்பிடும் பொழுது காற்றை நீங்கள் வாய் வழியாக விழுங்கக்கூடும். ஆகவே எப்பொழுதும் நேராக நிமிர்ந்து, முதுகை வளைக்காமல் உட்கார்ந்து சாப்பிட பழகிக் கொள்ளுங்கள். இது ஏப்பம் வருவதை குறைக்க உதவும்.

ஸ்ட்ரெஸ் மற்றும் எதிர்மறையான எண்ணங்கள் செரிமானத்தை பாதித்து ஏப்பத்தை தூண்டலாம். ஆகவே மூச்சு பயிற்சிகள், தியானம், யோகா மற்றும் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கக் கூடிய செயல்களை செய்வதன் மூலமாக உங்களை மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் செரிமான ஆரோக்கியம் மேம்படும். மேலும் ஏப்பம் வருவது குறையும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • திடீரென மொட்டையடித்த சுந்தர்.சி.. ரூ.1 லட்சம் நன்கொடை.. விறுவிறுப்படையும் மூக்குத்தி அம்மன் 2!