போலி ஆவணம் தயாரித்து சொத்து அபகரிப்பு ; உரிமையாளரை அடித்து உதைத்து வெளியேற்றிய போலீசார் ; அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்!

Author: Babu Lakshmanan
8 June 2023, 12:05 pm

கோவையில் போலி ஆவணம் தயாரித்து சொத்தை அபகரித்ததுடன், போலீசாரை வைத்து அடித்து உதைத்து வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

கோவை மாவட்டம் ஆவாரம்பாளையம் ரோடு வரதராஜ் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் அய்யாவு என்பவரின் மகன் சந்திர பாலன் (75). இவரது முதல் மனைவி மாணிக்கம். சந்திர பாலன் லேத் மெஷின் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். சந்திரபாலன் மாணிக்கம் தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. இதன் காரணமாக மாணிக்கத்தின் சம்மதத்துடன் கல்பனா என்ற பெண்ணை சந்திரபாலன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சந்திர பாலன் தனது முதல் மனைவி மாணிக்கம் மற்றும் இரண்டாவது மனைவி கல்பனா மற்றும் குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

இரண்டாவது திருமணம் செய்வதற்கு முன்பு சந்திரபாலன் தனது மனைவி மாணிக்கம் பெயரில் இடத்தை வாங்கி, அதில் கீழ் பகுதியில் ஒர்க்ஷாப் மாடியில் வீடும் கட்டி குடியேறினார். இந்நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு சந்திர பாலன் ஊரில் இல்லாத சமயத்தில் மாணிக்கத்தின் சகோதரர்கள் கோவைக்கு வந்து அவரை அழைத்துக்கொண்டு தங்களது சொந்த ஊரான உடுமலைப்பேட்டைக்கு சென்று விட்டனர். அதன் பிறகு மாணிக்கத்தின் பேரில் உள்ள சொத்தை அபகரிக்க மாணிக்கத்தின் சகோதரர்கள் திட்டமிட்டது சந்திர பாலனுக்கு தெரிய வந்தது. சொத்து பத்திரங்கள் அனைத்தும் சந்திரபாலனிடம் உள்ளது. உடனே இது குறித்து நீதிமன்றத்தில் சந்திரபாலன் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு நிலுவையில் இருந்த சமயத்தில் மாணிக்கத்தின் சொத்து பத்திரங்கள் காணவில்லை என கடந்த 2020 ஆம் ஆண்டு கோவை சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் தவறான தகவலை அளித்து அதன் பேரில் ஆவணம் கிடைக்கவில்லை என்ற சான்றிதழை பெற்று சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து சொத்து ஆவணத்தை மாணிக்கம் மற்றும் அவரது சகோதரர்கள் மறுபடியும் பெற்றனர். இது பற்றிய தகவல் அறிந்த சந்திர பாலன் 2020 ஆம் ஆண்டு கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு மாணிக்கம் மகாலட்சுமி என்ற நபருக்கு தனது சொத்தை கிரையம் செய்து கொடுத்ததாக போலியான விற்பனை ஆவணத்தை ஏற்படுத்தி உள்ளனர். இதைத் தொடர்ந்து, கடந்த 2021 ஆம் ஆண்டு சந்திர பாலன் மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தர். புகாரின் பேரில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மகாலட்சுமி மற்றும் அவரது கணவர் மதனகோபால் மற்றும் அதிகாரிகள் சிலர் சந்திர பாலனின் நிறுவனம் மற்றும் வீட்டிற்கு வந்து தகராறு செய்தனர். இதை தொடர்ந்து, அவர் சந்திர பாலன் காட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க சென்றார். ஆனால், அவரது புகாரை காட்டூர் போலீசார் பெற மறுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, நேற்று மாலை மகாலட்சுமி, அவரது கணவர் மதனகோபால் மற்றும் காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் உட்பட போலீசார் சந்திரபாலனின் வீட்டிற்கு சென்றனர். அங்கிருந்த சந்திர பாலன் மற்றும் அவரது மனைவி மற்றும் மகள்களை அடித்து உதைத்து வெளியேற்றினர். இது பற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதைத்தொடர்ந்து சந்திரபாலன் மற்றும் அவரது குடும்பத்தார் இன்று கோவை மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்த புகார் மனு அளித்தனர். புகாரில் அத்துமீறி அராஜகத்தில் ஈடுபட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

  • AR Rahman wife health issues சாய்ரா பானு வெளியிட்ட ஆடியோ..! பிரிவிற்கு காரணம் இது தானா..?
  • Views: - 447

    0

    1