விவசாயிகளை வஞ்சிக்கும்‌ திறனற்ற திமுக அரசு.. இனியும்‌ ஏமாற்றாதீங்க… அடுத்து போராட்டம்தான் ; எச்சரிக்கும் அண்ணாமலை!!

Author: Babu Lakshmanan
9 June 2023, 1:55 pm

சென்னை ; மணிமுத்தாறு அணை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;- கார்‌ பருவ சாகுபடிக்காக, திருநெல்வேலி மாவட்டம்‌, அம்பாசமுத்திரம்‌ வட்டம்‌, மணிமுத்தாறு அணையிலிருந்து, ஆண்டுதோறும்‌ ஜூன்‌ ஒன்றாம்‌ தேதி, 40 அடி பெருங்கால்‌ பாசன கால்வாய்‌ திறந்து விடப்படும்‌. பெருங்கால்‌ பாசனம்‌ மூலம்‌, சுற்றுப்‌ பகுதியில்‌ உள்ள ஏழு கிராமங்களில்‌ சுமார்‌ 3000 ஏக்கர்‌ நேரடி மற்றும்‌ மறைமுக பாசனப்‌ பகுதிகள்‌ இதனால்‌ பயன்பெறும்‌.

மணிமுத்தாறு அணையின்‌ மொத்த கொள்ளளவு 118 அடியாகும்‌. இத்தனை ஆண்டுகளும்‌, அணையில்‌ நாற்பது அடி தண்ணீர்‌ இருந்தாலே, பாசனத்திற்கு தண்ணீர்‌ திறந்து விடுவதுதான்‌ வழக்கம்‌. ஏனெனில்‌, சுற்றியுள்ள கிராமங்களுக்கு, விவசாயத்திற்கான மிக முக்கிய நீர்‌ ஆதாரம்‌ மணிமுத்தாறு அணை மட்டும்தான்‌. அணையின்‌ தற்போதைய நீர்மட்டம்‌ 66 அடி அளவில்‌ இருக்கிறது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில்‌, கடந்த ஜூன்‌ 1 ஆம்‌ தேதி திறக்கப்பட வேண்டிய மணிமுத்தாறு அணை, ஒரு வார கால தாமதம்‌ ஆகியும்‌ இன்னும்‌ பாசனத்திற்காக தண்ணீரைத்‌ திறந்து விடாமல்‌, தென்மேற்குப்‌ பருவமழை தொடங்கும்வரை, அணையைத்‌ திறந்து
விடாமல்‌ இருக்கலாம்‌ என்ற எண்ணத்தில்‌ விவசாயிகளை வஞ்சித்து வருகிறது திமுக அரசு. பாசனத்திற்காக அணையிலிருந்து தண்ணீர்‌ திறந்து விடாமல்‌, விவசாயிகளுக்கு சரியான தகவல்களும்‌ அளிக்காமல்‌, பிரச்சினைக்கான தீர்வையும்‌ வழங்காமல்‌, தள்ளிப்‌ போடப்‌ பார்க்கிறது.

விவசாயத்திற்குத்‌ தண்ணீர்‌ இல்லாமல்‌, தமிழக அரசும்‌ பாராமுகமாக இருப்பதால்‌, மிகவும்‌ வேதனையில்‌ இருக்கும்‌ மணிமுத்தாறு அணையைச்‌ சுற்றியுள்ள ஏழு கிராம விவசாயிகளும்‌ சாலை மறியல்‌ போராட்டத்தில்‌ ஈடுபடவிருப்பதாகச்‌ செய்திகள்‌ வந்தவண்ணம்‌ உள்ளன. ஆனால்‌, தமிழக அரசோ அதிகாரிகளோ, இது குறித்து எந்த நடவடிக்கைகளும்‌ எடுத்ததாகத்‌ தெரியவில்லை. மணிமுத்தாறுமட்டுமல்ல, பாபநாசம்‌ உள்ளிட்ட அணைகளைச்‌ சுற்றியுள்ள பல கிராம விவசாயிகளும்‌ இதனால்‌ பாதிக்கப்பட்டுள்ளனர்‌.

மாண்புமிகு பாரதப்‌ பிரதமர்‌ நரேந்திர மோடி அவர்கள்‌, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை, ரூபாய்‌ 143 உயர்த்தி, குவிண்டாலுக்கு ரூபாய்‌ 2183 ஆக அறிவித்துள்ளார்‌. ஆனால்‌, தேர்தல்‌ வாக்குறுதியில்‌, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூபாய்‌ 2500 ஆக்குவோம்‌ என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக,
அது குறித்து எந்த முயற்சியும்‌ எடுக்கவில்லை. அது மட்டுமல்லாது, மணிமுத்தாறு பாபநாசம்‌ அணைகளை இணைப்போம்‌ என்று 2021 ஆம்‌ ஆண்டு வாக்குறுதி கொடுத்த சபாநாயகர்‌ அப்பாவு, அதற்காக எந்தவித நடவடிக்கையும்‌ எடுத்ததாகத்‌ தெரியவில்லை.

இனியும்‌ விவசாயிகளை ஏமாற்றிக்‌ கொண்டிருக்காமல்‌, உடனடியாக தமிழக அரசு, விவசாயிகளுடன்‌ பேச்சுவார்த்தை நடத்தி, அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர்‌ திறந்து விடுவதில்‌ உள்ள பிரச்சனைகளுக்கான தீர்வை வழங்க வேண்டும்‌ என்றும்‌, விவசாயிகளைப்‌ போராடும்‌ நிலைக்குத்‌ தள்ள வேண்டாம்‌ என்றும்‌ தமிழக பாஜக சார்பில்‌ வலியுறுத்துகிறேன்‌, என தெரிவித்துள்ளார்.

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 447

    0

    0