வைரமுத்துவுக்கு 4வது சொந்த வீடு தேவையா?…வலுக்கும் எதிர்ப்பு!
Author: Udayachandran RadhaKrishnan9 June 2023, 9:41 pm
70 வயது கவிஞர் வைரமுத்துவுக்கு இது சோதனையான காலம் போலிருக்கிறது. அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொண்டு தவியாய் தவிக்கிறார்.
வைரமுத்துவின் தங்கை : சர்ச்சை
கடந்த மாதம் பிளஸ் டூ பொதுத் தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு பாராட்டு தெரிவித்தபோது,’எனக்கு பரிசாக கிடைத்த தங்கப்பேனாவை தங்கை நந்தினிக்கு பரிசாக நேரில் வழங்குவேன்’ என்று மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.
இதற்கு உடனடியாக எதிர்ப்பும் கிளம்பியது.” முதிய வயதில் உள்ள நீங்கள் மாணவி நந்தினியை பேத்தி என்றே அழைத்திருக்கவேண்டும், ஆனால் உங்களை வயதில் குறைந்தவராக காட்டிக்கொள்ள தங்கை என்று அழைத்திருக்கிறீர்கள். இது என்ன குசும்புத்தனம்? என்று பல்வேறு தரப்பினரிடமும் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார். இதற்காக வலைத்தளவாசிகள் அவரை கழுவிக் கழுவி ஊற்றவும் செய்தனர்.
முதலமைச்சர் ட்வீட் : கொந்தளித்த சின்மயி
அடுத்ததாக டெல்லியில் இந்திய மல்யுத்த வீராங்கனைகள் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி நடத்திய போராட்டத்திற்கு ஆதரவாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவின் மூலம் வைரமுத்து இன்னொரு சிக்கலை சந்தித்தார்.
“இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவின்போது, போராட்டம் நடத்திய மல்யுத்த வீராங்கனைகளை இழுத்துச் சென்றும் – தூக்கிச் சென்றும் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது. குடியரசுத் தலைவரையே புறந்தள்ளி, அனைத்து எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கும் ஆளாகி நடைபெறும் திறப்புவிழா நாளில் அராஜகமும் அரங்கேறுவதுதான் அறமா?” என்று முதலமைச்சர்
கேள்வி எழுப்பியதை பிரபல பாடகி சின்மயி கெட்டியாக பிடித்துக் கொண்டார்.
“நான் உள்பட19 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு கூறிய கவிஞர் வைரமுத்து எப்போதும் உங்கள் அருகிலேயேதான் இருக்கிறார். உங்கள் கட்சி மேடைகளிலும் தொடர்ந்து பேசி வருகிறார். அவர் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?…”என்ற நியாயமான கேள்வியை ஆதங்கத்துடன் எழுப்பி அதை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வைக்காக ட்விட்டரில் பதிவிட்டும் இருந்தார். தவிர அதன் நகலை திமுகவின் பெண்ணுரிமை போராளி கனிமொழி எம்பிக்கும் அனுப்பினார்.
அண்ணாமலை ஆதரவு
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் பாடகி சின்மயிக்கு ஆதரவாக, “தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் செங்கோல் வளைந்து விட்டது என்று சொல்கிறார். ஆனால், அவருக்கு மிகவும் நெருக்கமான நபராக திகழும் கவிப்பேரரசு வைரமுத்து மீதே, மொத்தம் 19 பாலியல் புகார்கள் இருக்கின்றன.
பாடகி சின்மயி எத்தனை வருஷமா கத்திட்டு இருக்காங்க.. அதுவும் பாலியல் விவகாரத்தில்.. இதுவரைக்கும் தமிழக அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லையே.. அட்லீஸ்ட் வைரமுத்து மீது எப்ஐஆராவது பதிவு செய்தாங்களா? அதனால் தமிழகத்தில்தான் செங்கோல் வளைந்து இருக்கிறது?” என்று ஒரு போடு போட்டார்.
முதலமைச்சரிடம் சின்மயி எழுப்பிய கேள்விக்கு திமுகவின் மூத்த நிர்வாகிகள் சிலர் பதிலும் கூறியிருந்தனர். ஆனால் அவையெல்லாம் வைரமுத்துவுக்கு ஆதரவாகவும், கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாகவும்தான் இருந்ததே தவிர ஒருவர் கூட சின்மயி கேட்ட கேள்விக்கு நேரடியாக, சரியான பதிலைச் சொன்னதுபோல் தெரியவில்லை.
அதனால் பாடகி சின்மயி உள்ளிட்ட 19 பெண்கள் வைத்த பாலியல் குற்றச்சாட்டுக்கு வைரமுத்து, தன் வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்ச்சியுடன் தனது மனசாட்சியிடம் விடை தேடிக் கொண்டிருக்கவே நேரம் சரியாக இருக்கும் என்கிறார்கள்.
இந்த நிலையில்தான் அவர் தொடர்பான இன்னொரு சர்ச்சை வெடித்துள்ளது.
கனவு இல்லம் : வலுக்கும் எதிர்ப்பு!
தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகளை பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழக அரசின் மூலம் ‘கனவு இல்லம்’ என்ற பெயரில் 2021 முதல் திமுக அரசு வீடுகளை வழங்கி வருகிறது. இதுவரை சாகித்ய அகாடமி விருது பெற்ற, ஐ.பி.எஸ். அதிகாரி திலகவதி, சு. வெங்கடேசன் எம்பி, ராமகிருஷ்ணன் உள்பட 16 பேருக்கு வீடு வழங்கப்பட்டு இருக்கிறது.
தமிழக அரசின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்துக்கு வீடு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு கடும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.
வசதி படைத்த, பெரும் கோடீஸ்வரரான கவிஞர் வைரமுத்து போன்றவர்களுக்கு, வீடு வழங்குவதற்கு பதிலாக, வறிய நிலையில் உள்ள எழுத்தாளர்களுக்கு வழங்கலாம்’ என, பலரும் தங்கள் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
சவுக்கு கொடுத்த சவுக்கடி
பிரபல அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கரும் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து மிக காட்டமாக கருத்துதெரிவித்துள்ளார்.
“வீடு இல்லாம தெருவுலயா இருக்காரு ? இவருக்கு எதுக்கு கனவு இல்லம் வீடு ? 2006ல் சம்பாரிச்சது கொஞ்ச நஞ்சம் அல்ல. பெரியார் படத்துல ஒரு பாட்டுக்கு 5 லட்சம் வாங்குன பெரிய மனுசன். அந்த படமே அரசு மானியத்துல எடுத்தது. இந்த அரசாங்கத்துக்கு துளி கூட சூடு, சொரணை கிடையாதா?” என்று திமுக அரசிடம் கோபம் கொப்பளிக்க சரமாரியாக கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.
மேலும் வைரமுத்துவுக்கு சொந்தமாக சென்னை பெசன்ட் நகர் பகுதியில் இரண்டு வீடுகளும், திருவான்மியூர் பகுதியில் ஒரு வீடும் இருக்கிறது என்று குறிப்பிட்டு அதற்கான ஆதாரங்களையும் சவுக்கு சங்கர் இணைத்துள்ளார்.
கவிஞருக்கு இந்த மூணு வீடு போதாதா ? கொஞ்சமாச்சும் மனசாட்சி இருக்கா உங்களுக்கு ? யார் அப்பா வீட்டு பணம் ? @CMOTamilnadu pic.twitter.com/mCgI0tPbzu
— Savukku Shankar (@Veera284) June 8, 2023
சமூக நல ஆர்வலர்கள் இது பற்றி என்ன சொல்கிறார்கள்?…
வைரமுத்துவுக்கு வீடா? கடும் எதிர்ப்பு
“சென்னை பெசன்ட் நகர், திருவான்மியூர் இந்திரா நகர் பகுதிகளில் இன்று
வீடு வாங்குவதும், வீடு கட்டுவதும் ஓரளவு வசதி படைத்தவர்களால் கூட கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத காரியம். அப்படி இருக்கும்போது எதற்காக வைரமுத்துவுக்கு தமிழக அரசின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு வீட்டை ஒதுக்கவேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
ஏனென்றால் திமுக ஆட்சி இருந்த 1996-2001 மற்றும் 2006-2011 காலகட்டத்திலேயே அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியின் அளவு கடந்த அன்பால் கவிஞர் வைரமுத்து ஏராளமான, தாராளமான பலன்களை அறுவடை செய்து விட்டார். அதனால் தந்தை வழியில் முதலமைச்சர் ஸ்டாலினும் அதைத்தொடர்வது சரியான
செயலா என்று யோசிக்கவேண்டும்.
சமூக நல ஆர்வலர்கள் யோசனை
உண்மையிலேயே தமிழின் வளர்ச்சிக்காக தங்கள் வாழ்நாளெல்லாம் உழைத்திட்ட கவிஞர்கள், எழுத்தாளர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். வைரமுத்துவுக்கு அரசு வழங்குவதாக கூறப்படும் அந்த வீட்டை இவர்களில் யாராவது ஒருவருக்கு வழங்கினால் அது நிச்சயம் பாராட்டுக்குரிய செயலாக இருக்கும். அதுவும் 19 இளம் பெண்களால் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான வைரமுத்துவுக்கு அரசு சார்பில் ஒரு வீட்டை வழங்குவது ஏற்புடையதாக இருக்குமா என்பது தெரியவில்லை.
ஏனென்றால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சின்மயி அளித்த புகார் காரணமாக வைரமுத்துவுக்கு வழங்குவதாக அறிவித்த ஓஎன்வி குறுப் என்னும் இலக்கிய விருதை பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு மறுபரிசீலனை செய்யப் போவதாக அறிவித்தது. இதனால் அந்த விருது வழங்கப்படாத நிலையிலேயே கேரள அரசிடம் ஒப்படைக்கும் நிலைக்கு அப்போது வைரமுத்து தள்ளப்பட்டார். அதுபோன்ற பெருந்தன்மையை கனவு இல்ல திட்டத்தில் தமிழக அரசின் வீடு கிடைத்தாலும் வைரமுத்து காட்டுவதே பாராட்டுக்குரியதாக இருக்கும்.
இல்லையென்றால் திமுக அரசுக்கு முட்டுக் கொடுக்கும் முக்கிய புள்ளிகளுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும் என்று ஏராளமான கவிஞர்களும் எழுத்தாளர்களும் மனதுக்குள் புலம்பும் நிலைதான் ஏற்படும்” என்று அந்த சமூக நல ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.