பாரா மெடிக்கல் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு ; கல்லூரி முதல்வர் தலைமறைவு..!!
Author: Babu Lakshmanan10 June 2023, 12:40 pm
தென்காசி அருகே சமுதாய பாரா மெடிக்கல் கல்லூரியில் படித்து வரும் 17 வயது மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த புகாரின் பேரில் கல்லூரி முதல்வர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தென்காசி மாவட்டம் தென்காசியில் இருந்து நெல்லை மற்றும் அம்பை செல்லும் பிரதான சாலையான ஆசாத்நகர் பகுதியில் அமைந்துள்ளது மாஸ் சமுதாய பாரா மெடிக்கல் கல்லூரி. இந்த கல்லூரியின் நிர்வாகி மற்றும் முதல்வராக இருந்து செயல்பட்டு வருபவர் தென்காசியை சேர்ந்த முகமது அன்சாரி.
இவர் தனது பாரா மெடிக்கல் கல்லூரியில் படித்து வரும் பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து அந்த மாணவி பாரா மெடிக்கல் கல்லூரி முதல்வர் முகம்மது அன்சாரி மீது குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் குற்றாலம் போலீசார் பாரா மெடிக்கல் கல்லூரி முதல்வர் முகமதுஅன்சாரி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ததுடன், தலைமறைவான முகமது அன்சாரியை வலைவீசி போலீசார் தேடி வருகின்றனர்.
வேலியே பயிரை மேய்ந்தது போன்ற செயலாக தனது கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய கல்லூரி முதல்வரே மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த சம்பவம் தென்காசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.