முதலமைச்சர் ஸ்டாலினிடம் நேரடியாக கோரிக்கை வைத்த மக்கள்… மறுநாளே கிராமத்தில் நிகழ்ந்த மாற்றம்!!!
Author: Udayachandran RadhaKrishnan10 June 2023, 1:46 pm
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தஞ்சை மற்றும் திருச்சி மாவட்டத்திற்கு நேற்று வருகை புரிந்தார்.
அப்போது லால்குடி அடுத்து ஆலங்குடி மகாஜனம் கிராம பொதுமக்கள் பேருந்து வசதி கூடுதலாக வேண்டி நேரடியாக கோரிக்கை வைத்தனர். அக்கோரிக்கையை முதலமைச்சர் ஏற்று உடனடியாக பேருந்து விடுவதற்கு உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி காலை 8 மணி மற்றும் மாலை 5.30 மணிக்கு லால்குடியில் இருந்து ஆலங்குடி மகாஜனத்திற்கும், காலை 8:35 மணி மற்றும் மாலை 6:05 மணிக்கு ஆலங்குடி மாகாணத்தில் இருந்து லால்குடிக்கும் என தினசரி நான்கு நடைகள் இப்பெயர்ந்துகள் சேவை இன்று முதல் இயக்கப்படுகிறது.
இவ் வழித்தடத்தில் காலை மற்றும் மாலையில் பயணிகள் நெரிசல் மிகுந்த நேரங்களில் பொதுமக்கள் பள்ளி மாணாக்கர் மற்றும் கட்டணமில்லா மகளிர் எளிதில் பயணம் செய்யும் வகையில் முதல்வர் ஆணைக்கிணங்க நகர பேருந்து மூலம் கூடுதலாக பேருந்து இயக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று காலை ஆலங்குடி மகாஜனத்திலிருந்து இயக்கப்பட்டது. பேருந்திற்கு முன்பாக பூஜையிட்டு சூடம் ஏற்றி பின்னர் பேருந்து ஓட்டுனர் இயக்கினார்.
முதல்வரிடம் கோரிக்கை வைத்த அடுத்த நாளே பேருந்து இயக்கியதால் முதலமைச்சருக்கு பெண்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். மேலும் புதிய பேருந்தில் ஏறி பயணம் செய்த பெண்கள் மகிழ்ச்சியில் நடனமாடி கொண்டாடி மகிழ்ந்தனர்.