என்னது சம்பளம் இல்லையா? வயிற்றில் அடிப்பது நியாயமா? திமுக அரசுக்கு எதிராக கொந்தளித்த டிடிவி!!

Author: Udayachandran RadhaKrishnan
10 June 2023, 7:49 pm

தமிழகத்தில் உள்ள 12,000 பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 11 மாதங்கள் ஊதியம் வழங்கப்படும் என்றும் மே மாதம் ஊதியம் கிடையாது என அறிவிப்பு வெளியாகியிருந்தது.

பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளருக்கு மாநில திட்ட இயக்குநர் அனுப்பிய கடிதத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அண்மையில் ஆண்டுக்கு 12 மாதங்கள் ஊதியம் வழங்க கேட்டு டிபிஐ வளாகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக ஜூன் மாதம் அறிவிப்பு வரும் என அமைச்சர்கள் உறுதி அளித்த நிலையில், போராட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும், மே மாதம் ஊதியம் கிடையாது என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதம் சம்பளம் வழங்கப்படாது என பள்ளிக்கல்விதுறை அறிவித்திருப்பதை வன்மையாக கண்டிக்கின்றேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், பணி நிரந்தரம் செய்யக் கோரியும், மே மாதம் சம்பளம் வழங்கக் கோரியும் பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியபோது அவர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று கூறிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், இப்போது பகுதி நேர ஆசிரியர்களின் வயிற்றில் அடிப்பது போல சம்பளம் வழங்க மறுப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

குறைந்த சம்பளத்தில் வீட்டு வாடகை, குடும்ப செலவு என ஏற்கனவே கடனில் தவித்து வருகின்ற பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொள்ளாமல் ஒரு மாத சம்பளம் தரப்படாது என்று அறிவிப்பதுதான் திராவிடமாடல் ஆட்சியா?, 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களுக்கும் மே மாத சம்பளம் உடனே வழங்க நடவடிக்கை எடுப்பதுடன், திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தபடி அவர்களை பணி நிரந்தரம் செய்யவும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!