ராணுவ வீரரின் மனைவி மானபங்கம் செய்யப்பட்டாரா? உண்மை என்ன? போலீசார் விசாரணையில் அதிரடி திருப்பம்!!
Author: Udayachandran RadhaKrishnan11 June 2023, 12:55 pm
திருவண்ணாமலை மாவட்டத்தின் ஆரணி அருகேயுள்ள படவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் ராணுவ வீரராக உள்ளார். இவரது மனைவி கீர்த்தி படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் ஆலயம் எதிரில் பேன்ஸி ஸ்டோர் நடத்தி வந்துள்ளார்.
அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருக்கும் இந்த கடையை குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்த ராமு என்பவர் குத்தகை எடுத்துள்ளார். அவரிடமிருந்து ராணுவ வீரரின் மனைவி வாடகைக்கு கடை எடுத்து நடத்தி வந்துள்ளார்.
இதற்கிடையில் தற்பொழுது ஒப்பந்தம் முடிவடைந்து கடையினை காலி செய்ய வேண்டும் என ராமு கூறியுள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரத்தில் ராமு தரப்பினர் பேன்ஸி ஸ்டோரில் இருந்த பொருட்களை வீசி எறிந்துள்ளதாகவும், அப்போது ஏற்பட்ட தகராறில் கீர்த்தி தாக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் சந்தவாசல் காவல் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்த நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே காஷ்மீரில் இருந்து ராணுவ வீரர் பிரபாகரன் டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘திருவண்ணாமலை மாவட்டம் படவேடு கிராமத்தில் கடை வைத்துள்ள எனது மனைவியை அரை நிர்வாணமாக்கி தாக்கியுள்ளார்கள். அவர் நடத்தி வந்த கடையை காலி செய்யக்கோரி 120 பேர் கும்பலாக வந்து கடையை சேதப்படுத்தியதோடு, மனைவியையும் தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி.,க்கு புகார் அனுப்பியுள்ளேன். உள்ளூர் காவல் நிலையத்தில் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. என் குடும்பத்தினரை காப்பாற்றுங்கள்’ என மண்டியிட்டு வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
உடனடியாக இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ஒப்பந்தத்தின் படி வாங்கிய பணத்தை திரும்ப கொடுத்து கடையை காலி செய்ய ராமு சொன்ன நிலையில், கீர்த்தியின் சகோதரர் ஜீவா அவரை தாக்கியுள்ளார்.
இதனால் ஆவேசமடைந்த அருகிலிருந்த பொதுமக்கள் ராமுவுக்கு ஆதரவாக அவர் தாக்கப்பட்டதை தட்டிக் கேட்டுள்ளனர். இதில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரத்தில் கடையில் இருந்த பொருட்களை எல்லாம் வெளியே போட்டுள்ளனர்.
ஆனால் கீர்த்தியையோ, அவரது தாயாரையோ தாக்கியதாகவோ, அவமதித்ததாகவோ கூறப்பட்ட நிலையில் அப்படி இரு சம்பவம் நடக்கவில்லை என தெரிய வந்தது.
இது மிகைப்படுத்தி சொல்லப்பட்டுள்ள தகவல் என்றும், இரு தரப்பும் சந்தவாசல் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என திருவண்ணாமலை மாவட்ட போலீசார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.