அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த அமலாக்கத்துறை.. நெஞ்சுவலி காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி.!
Author: Rajesh14 June 2023, 7:12 am
தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் வீடு மற்றும் உறவினர்கள் வீடு உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து, நேற்று சென்னையில் பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லம் மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறை உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் சுமார் 18 மணிநேரம் நடைபெற்ற சோதனையின் முடிவில் அமைச்சர் செந்தில் பாலஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜியை அதிகாரிகள் அழைத்துச் செல்லும் வழியில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சூழலில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள ஒமந்தூரர் மருத்துவமனைக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, சேகர்பாபு உள்ளிட்டோர் அடுத்தடுத்து வருகை தந்தனர்.
அமைச்சரை சந்தித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ” அமைச்சர் செந்தில் பாலாஜி நலமாக இருக்கிறார். இது பா.ஜ.கவின் பழிவாங்கும் நடவடிக்கை. இந்த உருட்டல், மிரட்டல்களுக்கு திமுக அரசு அஞ்சாது. அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை சட்டப்படி சந்திப்போம்” என்று கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, “அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்க்க அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. காரணம் எதுவும் சொல்லாமல் அவரை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டாரா அல்லது கைது செய்யப்பட்டாரா என்பது குறித்து உறுதியாக அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. கைது நடவடிக்கைக்குரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வோம். கட்சித் தலைமையுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையின் கஸ்டடியில் இருப்பதால் முன் ஜாமீன் தாக்கல் செய்ய முடியாத நிலை உள்ளது” என்று அவர் கூறினார்.
செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில் சோதனை நிறைவடைந்தது. 10 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையில், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில் இருந்து 3 பைகளில் ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
விசாரணைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜியை அழைத்து சென்ற போது திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக அமைச்சர் திரு செந்தில் பாலாஜி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு#SenthilBalaji |#EDRaid pic.twitter.com/BGLMryPmGY
— Tamil Diary (@TamildiaryIn) June 14, 2023
விசாரணைக்கு அழைத்து செல்லப்படுவதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் எந்த வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் இதுவரை உறுதியான தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. இவரது கைதை தொடர்ந்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கரூரில் இருந்து புறப்பட்டுள்ளனர்.