முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பயம் வந்திருச்சு… அமைச்சர் செந்தில் பாலாஜியை ஓடோடிப் போய் பார்க்க இதுதான் காரணம் ; இபிஎஸ் கடும் விமர்சனம்!!

Author: Babu Lakshmanan
14 June 2023, 1:46 pm

சென்னை ; அமைச்சர் செந்தில் பாலாஜி வாய்திறந்தால் பிரச்சனை ஏற்பட்டு விடும் என முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சுவதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறையினர், அவரை இன்று அதிகாலை கைது செய்தனர். அப்போது, அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது ;- வாக்கிங் சென்ற போது சோதனை குறித்து தகவல் அறிந்த உடன், முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் எனக் கூறினார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அதன்படி, ஆவணங்களை கொடுக்க வேண்டியது தானே. கைது நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் இந்த பிரச்சனையே வந்திருக்காது.

பிரச்சனையில் இருந்து தப்பிக்க நாடகத்தை நடத்தியிருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில்தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். செந்தில் பாலாஜி கைதுக்கு காரணம் புதிய வழக்கு அல்ல; 4 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு அமைச்சரின் கைதில் என்ன மனித உரிமை மீறல் உள்ளது..? முறைகேடாக மதுபான பார்கள் செயல்பட அனுமதி அளித்ததன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் குடும்பத்தினருக்கு சட்டவிரோதமாக பணம் சென்றதாக புகார் உள்ளது. செந்தில் பாலாஜி உத்தமர் போல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். எதிர்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு; ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு. ரூ.30 ஆயிரம் கோடி குறித்து அமலாக்கத்துறையிடம் செந்தில் பாலாஜி வாய் திறந்து விட்டால், தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்படுமோ என்ற அச்சத்தில்தான் அவரை ஓடோடிச் சென்று பார்த்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

செந்தில் பாலாஜி கைதால் முதலமைச்சர், அமைச்சர்கள் பதறிப் போய் உள்ளனர். தார்மீக அடிப்படையில் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார்.

முறைகேடு புகார்கள் பற்றி ஆளுநரிடம் ஏற்கனவே அதிமுக மனுவாக அளித்துள்ளது. தலைமை செயலகத்தில் அமைச்சரின் அறையில் சோதனை நடத்தியது தமிழகத்திற்கே தலைகுனிவு, எனக் கூறினார்.

  • Mysskin controversial speech வாய திறந்தால் கெட்ட வார்த்தை…மேடை நாகரீகம் தெரியாதா…மிஷ்கினை வறுத்தெடுத்த பிரபல இயக்குனர்கள்..!