பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை ; முன்னாள் டிஜிபிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை – விழுப்புரம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Author: Babu Lakshmanan
16 June 2023, 1:08 pm

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, முதலமைச்சரின் பாதுகாப்பு பணிகளை சட்டம் -ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கவனித்து வந்தார்.

அந்த சமயம், பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரை காரில் அழைத்துச் சென்று, டிஜிபி ராஜேஸ் தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி, பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் மற்றும் அப்போதையை டிஜிபி திரிபாதிக்கு புகார் அளித்தார்.

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த் சம்பவத்தை தொடர்ந்து, சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரியின் புகார் தொடர்பாக ராஜேஷ் தாஸ் மற்றும் அவரது உத்தரவிபடி பெண் ஐபிஎஸ் அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி. ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பிறகு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பை அறிவித்துள்ளது. அதில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 20 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. பெண் ஐபிஎஸ் அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி. கண்ணனுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

  • Pahalgam Attack 29 Dead Leo Cameraman Manoj Shares பகல்காமில் நடந்த லியோ படப்பிடிப்பு… தாக்குதல் நடந்த இடத்தில்தான் : ஒளிப்பதிவாளரின் உருக்கம்!
  • Close menu