ஊழல் பெருச்சாளி அமைச்சரவையில் தொடர்வது திமுகவுக்கு ஓகே வா இருக்கலாம்… ஆனா தமிழகத்திற்கு அசிங்கம் : ஷயாம் விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 June 2023, 7:27 pm

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. கைது நடவடிக்கையின் போது அமைச்சருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மேற்கொண்ட பரிசோதனையில் மூன்று முக்கியமான குழாய்களில் அடைப்பு உள்ளது கண்டறியப்பட்டது. இதனை மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வாயிலாக தெரிவித்தது. மேலும் அமைச்சருக்கு விரைவில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தப்பட்டது. நீதிமன்ற அனுமதி பெற்ற தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாகாக்களை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமிக்கு மாற்ற பரிந்துரைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார். ஆனால், இலாகா மாற்றத்திற்கு செந்தில் பாலாஜியின் உடல்நிலையை காரணம் காட்டியதை ஏற்க மறுத்த தமிழ்நாடு ஆளுநர் சரியான காரணத்தை மேற்கோள் காட்டுமாறு கூறி பரிந்துரையை திருப்பி அனுப்பினார்.

தொடர்ந்து நேற்று இரவு அவசர ஆலோசனை நடத்தி, மீண்டும் ஆளுநருக்கு இலாகா மாற்றம் குறித்த பரிந்துரை கடிதத்தை முதலமைச்சர் அனுப்பினார். ஒருவேளை மீண்டும் அனுப்பப்பட்ட பரிந்துரையை ஆளுநர் ஏற்காதபட்சத்தில் இலாகா மாற்றம் தொடர்பாக பொதுத்துறை சார்பில் அரசாணை வெளியிடத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருந்தது.

இந்த நிலையில் செந்தில் பாலாஜி வகித்து வந்த துறைகளை வேறு அமைச்சர்களுக்கு ஒதுக்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். மேலும் அதில் செந்தில் பாலாஜி தமிழ்நாடு அமைச்சரவையில் நீடிக்கக் கூடாது என ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டமட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக ஏற்கவும் ஆளுநர் மறுத்துள்ளார்.

இந்த நிலையில் அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பது சட்டவிரோதம் என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வரும் நிலையில், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், வாங்கிய லஞ்சத்தை திருப்பி கொடுத்ததாக நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியே வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். விசாரணை கைதி சில நாட்களில் தண்டனை கைதியாகிவிடுவார்.

இப்படிபட்ட ஒரு ஊழல் பெருச்சாளி தமிழக அமைச்சரவையில் தொடர்வது திமுகவிற்கு ஏற்புடையதாக இருக்கலாம்,ஆனால் தமிழகத்திற்கு அசிங்கம்! என பதிவிட்டுள்ளார்.

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 649

    0

    0