தாறுமாறாக ஓடி நேருக்கு நேர் மோதி உருக்குலைந்த தனியார் பேருந்துகள்… 4 பேர் பலியான சோகம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
19 June 2023, 4:32 pm

கடலூரில் இருந்து பண்ருட்டிக்கு இன்று காலை பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் பஸ் சென்றது. இதேபோன்று பண்ருட்டியிலிருந்து கடலூருக்கு பயணிகளை ஏற்றிகொண்டு தனியார் பேருந்து எதிரில் வந்தது.

இதில் பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி மேல்பட்டாம்பாக்கம் சாலையில் சென்று கொண்டிருந்த போது பேருந்தின் முன்பக்க டயர் வெடித்தது.

இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. அப்போது கடலூரிலிருந்து பண்ருட்டி நோக்கி வந்த பேருந்து ஓட்டுநர் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

எதிரில் தாறுமாறாக வந்த பேருந்து மோதாமல் இருக்க, சாலை ஓரமாக பேருந்தை ஓட்டுநர் ஓட்டிச் சென்றார். இருந்தபோதும் முன் டயர் வெடித்து தாறுமாறாக வந்த பஸ், எதிரில் வந்த பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது.

இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அலறினர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த, அவ்வழியே சென்றவர்கள் பேருந்தில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் அளித்தனர்.

இதில் படுகாயமடைந்த 86-க்கும் மேற்பட்டவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், உள்ளிட்ட நெல்லிக்குப்பம் போலீசார் விரைந்து வந்தனர்.

தீயணைப்புத் துறை வீரர்களை உதவிக்கு அழைத்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும், அப்பகுதியில் இருந்த வாலிபர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதில் தனியார் பேருந்து ஓட்டுநர் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். இன்று காலை 10 மணிக்கு விபத்து நடந்தது. தொடர்ந்து காலை 11.30 மணிவரை மீட்பு பணிகள் நடந்து வருகிறது. மீட்பு பணிகள் முடிந்த பிறகே, எத்தனை பேர் உயிரிழந்தனர்.

அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள், படுகாயமடைந்தவர்கள் எத்தனை பேர் என்பதை சரியாக சொல்ல முடியும் என போலீசார் தெரிவித்தனர். பேருந்து விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரையும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனை கேள்விப்பட்ட பயணிகளின் உறவினர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பான நிலை காணப்பட்டது.

முதல்கட்ட விசாரணையில் பலியானர்களில் ஒருவர் பண்ருட்டியை சேர்ந்த சீனுவாசன் என்பதும், மற்றொருவர் துர்கா பேருந்து ஓட்டுநர் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த அங்காளமணி என்பதும் மற்றொருவர் சுகம் பேருந்து நடத்துனர் முருகன் என்பதும் மற்றும் ஒருவர் என 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவத்தால் பண்ருட்டி-கடலூர் சாலையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. காயம் அடைந்தவர்கள் பெரும்பாலானோர் காலையிலேயே அலுவலகம் வந்தவர்கள் பள்ளி கல்லூரிக்கு வந்தவர்கள்.

மேலும் காயம் அடைந்தவர்களை சட்டமன்ற உறுப்பினர்கள் ஐயப்பன், வேல்முருகன் மற்றும் கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!