கோர்ட் சிக்னல் கொடுத்தாச்சு… அடுத்து அந்த அமைச்சர் தான்..? இவரையும் கோபாலபுரம் குடும்பம் காப்பாற்ற போராடுமா..? அண்ணாமலை விளாசல்..!!
Author: Babu Lakshmanan19 June 2023, 7:26 pm
அமைச்சர் பொன்முடிக்கு எதிராக வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 2006-11ம் ஆண்டு திமுக ஆட்சியில் பொன்முடி அமைச்சராக இருந்த போது, செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்தது மூலமாக அரசுக்கு ரூ.28 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரது மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள் மீதும் வழக்குப்பதியப்பட்டது.
இந்த வழக்கு விழுப்புரத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க கூடிய சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
தங்கம் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி சந்திரசேகரன், அனுமதியை மீறி 2,64,644 லோடு லாரி செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதனால் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று அவரது கோரிக்கையை மறுத்து விட்டார்.
மேலும், ஊழல் தடுப்பு சட்டத்தின்படி இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி அமைச்சரது மகனின் மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, 2006-11ல் சட்டவிரோதமாக செம்மண் எடுத்ததாக அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அரசுக்கு ரூ.28.4 கோடி நிதி இழப்பு ஏற்படுத்தியதாக அவரை முதலமைச்சர் ஸ்டாலின் பதவி நீக்கம் செய்ய வேண்டும். மாறாக, செந்தில் பாலாஜியை கோபாலபுரத்து குடும்பம் காப்பாற்றுவதைப் போல, அமைச்சர் பொன்முடியையும் காப்பாற்றப்படுவாரா..?, எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.