அதிமுக நிர்வாகி மீது காவல் நிலையத்தில் தாக்குதல்… தமிழ்நாட்டை வன்முறை களமாக மாற்றியுள்ளது திமுக அரசு : இபிஎஸ் கண்டனம்!

Author: Udayachandran RadhaKrishnan
20 June 2023, 7:57 pm

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே கஞ்சா மற்றும் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக புகார்கள் எழுந்தது. ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த செந்தில், சத்யராஜ் ஆகிய இருவர் ஆட்டையாம்பட்டி, மல்லசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பதாக ஊராட்சி மன்ற தலைவராக உள்ள கண்ணன் ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு இதுதொடர்பாக காவல் நிலையத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் மீண்டும் புகாரளித்த நிலையில் காவல் நிலையத்திற்கு வந்த ஏழு பேர் கொண்ட கும்பல் அங்கிருந்த கண்ணன் மற்றும் அவரது தரப்பைச் சேர்ந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அவர்களை தாக்கினர்.

அதேநேரம் கண்ணன் தரப்பினரும் அவர்களை தாக்கினர். இதனால் சிறிது நேரத்தில் காவல்நிலைய வளாகமே கலவரக்காடாக மாறியது. இந்த தாக்குதலில் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கண்ணனின் மண்டை உடைந்தது. இரண்டு பேர் படுகாயம் அடைந்த நிலையில் மூவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காவலர்கள் முன்னிலையில் கஞ்சா வியாபாரிகளும், புகார் சொன்னவர்கள் தரப்பும் மோதிக்கொண்ட சம்பவம் ஆட்டையாம்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பான காட்சிகள் வெளியான நிலையில் போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி காவல்நிலையத்தில் கஞ்சா விற்பனை, ரேஷன் அரிசி கடத்தல் குறித்து புகார் அளித்த அதிமுக நிர்வாகி மீது காவல்நிலையத்தில் வைத்தே தாக்குதல் நடத்தியிருக்கும் குண்டர்களுக்கும், தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கை காப்பதில் தொடர் தோல்வியுற்றிருக்கும் இந்த விடியா அரசுக்கும் எனது கடும் கண்டனங்கள்.

தமிழ்நாட்டை வன்முறை களமாக மாற்றி இருக்கும்
நிர்வாகத் திறனற்ற திமுக அரசே! சட்டம் ஒழுங்கை காக்க நடவடிக்கை எடு!! என பதிவிட்டுள்ளார்.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 331

    0

    0