கரூரில் மீண்டும் தொடங்கியது ஐடி ரெய்டு… இந்த முறை உஷார்… பலத்த பாதுகாப்போடு களமிறங்கிய வருமான வரித்துறை அதிகாரிகள்..!!

Author: Babu Lakshmanan
23 June 2023, 10:24 am

கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.

கரூரில் கடந்த மே மாதம் 26ம் தேதி தொடங்கிய வருமான வரித்துறையினரின் சோதனை 8 நாட்களாக நடைபெற்றது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் அலுவலகம் மற்றும் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது பெண் வருமான வரித்துறை அதிகாரியை திமுகவினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து, கரூர் வையாபுரி நகர் 4வது கிராஸ் பகுதியில் அமைந்துள்ள ஆடிட்டர் அலுவலகம், சின்ன ஆண்டாகோவில் ஏ.கே.ஜி காலனி பகுதியில் அமைந்துள்ள மளிகை கடை உரிமையாளர் தங்கராஜ் வீடு என கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்கள் மொத்தம் 23 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

குறிப்பாக, கரூர் – ஈரோடு சாலையில் உள்ள சக்தி மெஸ் கார்த்தி இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது, அவரது வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்து விட்டுச் சென்றனர்.

இந்த நிலையில், சீல் வைக்கப்பட்ட சக்தி மெஸ் கார்த்தி இல்லத்தில் வருமான வரித்துறை இன்று அதிகாலை முதல் மீண்டும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கோதை நகர் பகுதியில் அமைந்துள்ள அன்னை அபார்ட்மெண்ட் அடுக்குமாடி குடியிருப்பில் சக்தி மெஸ் உணவக உரிமையாளர் கார்த்தி மற்றும் அதிபர் ரமேஷ் ஆகிய இருவரது வீடு அமைந்துள்ளது.

5 வாகனங்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் உள்ளே சென்றுள்ளனர். பாதுகாப்புக்காக 20க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படை வீரர்கள் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் கரூரில் மீண்டும் சோதனையை தொடங்கியிருப்பது திமுகவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Ajithkumar in GBU இன்னும் ஏழே நாள் தான்.. Good Bad Ugly செம அப்டேட்!
  • Views: - 459

    1

    0