ED வலையில் சிக்கும் கோட்டை அதிகாரிகள்!…. செந்தில் பாலாஜிக்கு புதிய தலைவலி!

Author: Udayachandran RadhaKrishnan
25 June 2023, 7:45 pm

சுப்ரீம் கோர்ட் உத்தரவை நிறைவேற்றும் விதமாக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 13ம் தேதி 17 மணி நேரம் விசாரணை நடத்தி அவரை கைது செய்த பின்பு தமிழக அரசியல் களம் சூடு பிடித்துவிட்டது.

அதுவும் அன்றைய நாளில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அவருடைய அறையில் 10 மணிநேரம் அமலாக்கத்துறையினர் தொடர் சோதனை நடத்தி ஏராளமான முக்கிய ஆவணங்களை கைப்பற்றிச் சென்றதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

மருத்துவமனையில் செந்தில்பாலாஜி

இந்த நிலையில்தான் செந்தில் பாலாஜி தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி இதயத்தில் இருந்த 4 அடைப்புகளை நீக்குவதற்காக சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் பைபாஸ் சர்ஜரியும் செய்துகொண்டார்.

இதனால் வரும் 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட செந்தில் பாலாஜியை 8 நாட்கள் தங்களது கஸ்டடியில் எடுத்து விசாரிக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தும் கூட எந்த பிரயோஜனமும் இல்லாமல் போனது.

சுப்ரீம் கோர்ட் போட்ட உத்தரவு

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் 2011 முதல் 2015 வரை தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி செந்தில் பாலாஜி 40க்கும் மேற்பட்டவர்களிடம் ஒரு கோடியே 64 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கைத்தான் விசாரிப்பதற்கு கடந்த மே மாதம் 16ம் தேதி சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது.

அமலாக்கத்துறை இந்த வழக்கை விசாரித்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். இல்லையென்றால் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து விசாரிக்க நாங்கள் உத்தரவிடுவோம் என்றும் அப்போது சுப்ரீம் கோர்ட் அதிரடியாகவும் கூறியது.

சோதனை மேல் சோதனை

இந்த வழக்கு விசாரிக்கப்படும் முன்பு வரை டாஸ்மாக் கடைகளில் ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாயை விற்பனையாளர்கள் கட்டாயமாக வசூலிப்பதும், அரசு அனுமதி இல்லாமல் செயல்பட்டு வரும் 3500க்கு மேற்பட்ட மதுபார்கள் மூலம் மட்டும் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை யாருக்கோ செல்கிறது என்ற குற்றச்சாட்டுகள்தான் செந்தில் பாலாஜிக்கு குடைச்சலை கொடுத்துக் கொண்டிருந்தது. அதே நேரம் சுப்ரீம் கோர்ட் ஆணையின்படி அமலாக்கத்துறை களம் இறங்கிய பிறகு செந்தில் பாலாஜிக்கு அது சோதனைக்கு மேல் சோதனையாகவும் மாறிப் போனது.

இன்னும் சொல்லப்போனால் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக கரூர் ஆண்டான் கோவில் கிழக்கு கிராமப் பகுதியில் கடந்த ஆண்டு மே மாதம் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, செந்தில் பாலாஜி, அசோக்குமார் ஆகியோர் கூட்டு சேர்ந்து, பினாமிகள் பெயரில் 11 லட்சம் ரூபாய்க்கு வாங்கியதும் அமலாக்கத்துறைக்கு தெரிய வந்தது.

சிக்கிய குடும்பம்

இதற்கு அசோக்குமார் மனைவியும், மாமியாரும் உடந்தையாக இருந்துள்ளனர் என்பதும் இதனால்தான் இந்த வழக்கில், செந்தில்பாலாஜி, அசோக்குமார் அவர்களது மனைவிமார்கள் மற்றும் குடும்பத்தினரையும் சேர்க்க அமலாக்கத்துறை முடிவு செய்து இருப்பதும் உறுதியாகி உள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்த அமலாக்கத்துறை இரண்டு முறை சம்மன் அனுப்பியும் ரகசிய இடத்தில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படும் அசோக்குமார் ஆஜராகவில்லை. மாறாக தனது வழக்கறிஞர்கள் மூலம் ஆஜராவதற்கு கால அவகாசமும் கேட்டுள்ளார். அசோக்குமார் எங்கே இருக்கிறார் என்பது இதுவரை உறுதியாக தெரியவில்லை என்பதால்தான் அண்ணன்-தம்பி மீதான சந்தேகம் அமலாக்கத்துறைக்கு மேலும் வலுத்துள்ளது.

அதேநேரம் செந்தில் பாலாஜியை திட்டமிட்டபடி காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லையே என்ற கவலையில் உள்ள அமலாக்கத்துறை அடுத்தகட்டமாக இன்னொரு அதிரடி நடவடிக்கையில் இறங்கி இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

சிக்கும் கோட்டை அதிகாரிகள்

2014 மற்றும் 2015ம் ஆண்டு காலகட்டத்தில் நடைபெற்றதாக கூறப்படும் லஞ்ச வழக்கு தொடர்பாக விசாரிப்பதாக கூறப்பட்டாலும் செந்தில் பாலாஜி மற்றும் அவர் தொடர்புடையவர்களின் மொத்த ஆவணங்களையும் சென்னை கோட்டையில் உள்ள செந்தில் பாலாஜியின் அறையில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள்
கைப்பற்றிச் சென்றுள்ளனர்.

இதை வைத்துக்கொண்டுதான் செந்தில் பாலாஜி திமுக அரசில் அமைச்சராக பதவியேற்ற பின்னர் நடந்த கொடுக்கல், வாங்கல் போன்ற பணபரிமாற்றங்களை அமலாக்கத்துறை தோண்டித் துருவி எடுத்து ஆட்டம் காட்டி வருகிறது.

ஏனென்றால் செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனை நடத்தியபோதே மூவர் குழு ஒன்று தலைமைச் செயலகத்துக்குள் நுழைந்தது. முக்கிய கோப்புகள் அனைத்தும் அமைச்சரின் அறையில் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்து இருந்ததால் அங்கு தீவிர சோதனையையும் முடுக்கிவிட்டது. இதற்கு முதலில் அங்கிருந்த மாநில அரசு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தாலும் கூட வந்திருப்பவர்கள் அமலாக்கத்துறை
அதிகாரிகள் என்பதால் பின்னர் நமக்கு எதற்கு வம்பு என்று வேறு வழியின்றி ஒதுங்கிக் கொண்டு விட்டனர்.

முக்கிய கோப்புகள் சிக்கியது

செந்தில் பாலாஜியின் அறையில் இருந்து முக்கியமான பைல்கள் சிலவற்றை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக சொல்கிறார்கள். இதில் மதுவிலக்கு துறை தொடர்பான பைல் ஒன்று தான் செந்தில் பாலாஜிக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

தனது உடல் நிலையை காரணம் காட்டி செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை அதிகாரிகளின் நேரடி விசாரணையில் இருந்து இன்னும் ஒரு மாதம் வரை நழுவிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. அதற்குப் பிறகும் அவரால் விசாரணையை இழுத்து அடிக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.

அதிகாரியின் ரகசிய அறிக்கை

ஏனென்றால் மதுவிலக்கு துறையை கவனித்து வந்த ஒரு அதிகாரி நாள்தோறும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரகசிய அறிக்கை ஒன்றை வழங்கி இருக்கிறார்.
அதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அன்றாடம் சட்ட விரோத மதுபார்கள் செயல்பாட்டின் மூலம் கிடைத்த தொகை, டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கட்டாயமாக வசூலிக்கப்பட்டதன் மூலம் முறைகேடாக வந்த வருமானம் போன்றவை குறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

அந்த அறிக்கை முழுவதும் தற்போது அமலாக்கத்துறையின் கைகளுக்கு சென்றுள்ளது என்கிறார்கள். அதனால் அந்த அதிகாரியை விசாரணை வளையத்துக்குள் அமலாக்கத் துறை கொண்டு வர திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

“மாநிலத்தின் உயர் அதிகாரி ஒருவரை அமலாக்கத்துறை விரைவில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விசாரணை நடத்தினால் அது ஆளும் திமுக அரசுக்கு பெரும் தலைகுனிவையே ஏற்படுத்தும்” என்று மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

மதுபான விவகாரம்

“ஏனென்றால் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய பிறகு செந்தில் பாலாஜி அவருடைய சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் 10 பேர் வரை பினாமி சொத்து வாங்கிய குற்றச்சாட்டில் சிக்கிக் கொண்டு விட்டனர். இதுவே அமைச்சர் செந்தில் பாலாஜியின் மன நிம்மதியை கெடுத்து விட்டிருக்கும்.

தற்போது மூன்றாவதாக, ஒரு மதுபாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வசூலித்தது,
சட்டவிரோத மதுபார்கள் மூலம் குறுக்கு வழியில் பல்லாயிரம் கோடி ரூபாய் சம்பாதித்தது போன்ற விவகாரங்களும் செந்தில் பாலாஜிக்கு தலைவலியை தருவதாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தலைமைச் செயலகத்துக்குள் உள்ள தனது அறைக்கு மத்திய விசாரணை அமைப்புகள் எதுவும் அவ்வளவு எளிதில் நுழைந்து முடியாது என்ற அதீத நம்பிக்கையில் மதுவிலக்குத் துறை உயர் அதிகாரியிடம் அன்றாடம் பெற்ற அறிக்கையை அமைச்சர் செந்தில் பாலாஜி வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதுவே அவருக்கு இப்போது பெரும் வினையாக மாறிவிட்டது.

தர்மசங்கடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வரும் நேரத்தில் அதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக இந்தப் பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்திருப்பது திமுக தலைமைக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. இதை எப்படி முதலமைச்சர் ஸ்டாலின் துணிச்சலுடன் எதிர்கொள்ளப் போகிறார் என்ற கேள்வியும் எழுகிறது. ஏனென்றால் தேர்தல் வருவதற்குள் திமுக அரசு மீது ஊழல் முத்திரை குத்தப்பட்டு விட்டால் அது வாக்காளர்களிடம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் மட்டுமின்றி அது வெற்றி வாய்ப்பையும் கணிசமாக குறைத்து விடும்.

ஊழல் குற்றச்சாட்டை ஸ்டாலின் துணிச்சலாக சமாளித்துவிட்டாலும் கூட ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தனது அரசில் பணியாற்றும் அதிகாரிகள் சிலரும் விசாரணை வளையத்துக்குள் செல்ல இருப்பதாக வெளிவரும் தகவல்கள் ஸ்டாலினுக்கு மிகுந்த தர்ம சங்கட நிலையைத்தான் ஏற்படுத்தும். விசாரணைக்கு பின்பு ஒருவேளை தலைமைச் செயலக அலுவலர்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்.

தேர்தலில் அதிமுக பாஜகவுக்கு சாதகமான சூழல்

கடந்தாண்டு இறுதியில் நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் அமைச்சர்கள் அடுத்து ஏடாகூடமாக என்ன செய்து எனது தூக்கத்தை கெடுக்கப் போகிறார்களோ தெரியவில்லை என்று ஸ்டாலின் புலம்பியிருந்தார். இது அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்திலும் தற்போது உறுதியாகி இருக்கிறது.

கடந்த இரண்டு வாரங்களாக செந்தில் பாலாஜி அரசியலில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டிருப்பதால் கொங்கு மண்டலத்தில் திமுகவின் செயல்பாடுகள் சுணக்கம் கண்டுள்ளன. இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர் நேரடியாக தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கு இன்னும் எவ்வளவு காலம் ஆகும் என்பதை துல்லியமாக கூற முடியாது. இதுபோன்ற சூழ்நிலை நாடாளுமன்றத் தேர்தலின்போது கொங்கு மண்டலத்தில் அதிமுக, பாஜக கட்சிகளுக்கு சாதகமான நிலையை உருவாக்கும் என்பதும் உண்மை” என்று அந்த மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 322

    0

    0