திருமண நாளே இறந்த நாளான சோகம்… கோவிலுக்கு சென்ற தம்பதிக்கு நேர்ந்த கோர சம்பவம் ; கதறி துடிக்கும் குடும்பம்..!!

Author: Babu Lakshmanan
26 June 2023, 7:06 pm

திருமண நாளில் குடும்பத்தோடு இருசக்கரவாகனத்தில் கோவிலுக்கு சென்ற போது நிகழ்ந்த விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே அரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்த தம்பதி ஈஸ்வரன்-சங்கீதா. திருமணமாகி இரு ஆண்குழந்தைகள் உள்ள நிலையில், சென்னையில் உள்ள தனியார் கார் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலைபார்த்து வருகிறார். இன்று திருமண நாள் என்பதால் மனைவி சங்கீதா மற்றும் 3 வயது ஆண்குழந்தையை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள பச்சயம்மன் ஆலயத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது, ஆற்காட்டில் இருந்து கலவை நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சாகும் முன்பு கூட தன் 3 வயது ஆண்குழந்தையை சாலையோர செடி மீது வீசி காப்பாற்றியுள்ளனர். தாய், தந்தை ஒரே நேரத்தில் உயிரிழந்ததால் இரு குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

உயிரிழந்த ஈஸ்வரனின் தந்தை வெங்கடேசன், தாய் மற்றும் சித்தப்பா பாலமுருகன், சங்கீதாவின் தாய், தந்தை ஆகியோர் உள்ளதால் அவர்களின் அரவணைப்பில் குழந்தைகள் வளர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரய்யா சம்பவ இடத்திற்கு நேரில் வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஆற்காடு கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Sawadeeka Song Lyric Video Releaseபோடுங்கடா ஆட்டத்த..சொன்ன மாதிரி சொல்லி அடித்த அஜித்..”Sawadeeka”லிரிக் வீடியோ வெளியீடு..!
  • Views: - 444

    0

    0