ஆளுநர் ரவிக்கு ஏன் கோபம்…? சிதம்பரம் நடராஜர் கோவிலை கட்டுப்பாட்டில் எடுங்க ; தமிழக அரசுக்கு கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
27 June 2023, 5:03 pm

சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழக அரசு கையகப்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

கடலூரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- மத்திய அரசு பொது சிவில் போர்டு சட்டத்தை நிறைவேற்றுவோம். ஆனால், சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்றாமல் உள்ளது. நாடாளுமன்றத்தின் மேலவையில் நிறைவேற்றப்பட்ட இந்த இட ஒதுக்கீட்டை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

1986ஆம் ஆண்டு குழந்தைத் திருமணம் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டிருந்தாலும், சிதம்பரத்தில் தீட்சிதர்கள் குடும்பங்களில் ஆண்டுதோறும் குழந்தைத் திருமணம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தற்போது ஆதாரப்பூர்வமாக இச்செயல் தெரிவிக்கப்பட்டதால் தீட்சிதர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டு உள்ளது. ஆனால், அவர்களை கைது செய்த போலீசாரை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டிக்கிறார்.

மேலும் அவர், பெண்களுக்கு இருவிரல் சோதனை நடந்ததாக உண்மைக்கு மாறான தகவலை கூறி வருகிறார். நானே குழந்தைத் திருமணம் செய்துள்ளேன் என்று கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தமிழ்நாடு அரசு வழக்குப் பதிவு செய்ய வேண்டும். சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய தீட்சிதர்கள் தடை விதித்து பொதுமக்களிடம் தகராறு செய்து வருகின்றனர். இதை கேட்ட அதிகாரிகளிடமும் தகராறு செய்கிறார்கள். ஆகவே, தமிழ்நாடு அரசு தனிச் சட்டம் இயற்றி சிதம்பரம் நடராஜர் கோயிலை கையகப்படுத்த வேண்டும்.

இந்து சமய அறநிலையத்துறையிடம் உள்ள கோயில்கள், சொத்துக்கள் மற்றும் நகைகளை இந்து அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்து முன்னணியினர் குரல் கொடுத்து வருகிறார்கள். இது எப்படி சாத்தியம்? தனியாரிடம் கொடுத்தால், எப்படி பாதுகாப்பாக இருக்கும்?

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி வெற்றி பெறுவோம். தனியார் பேருந்து விபத்துகள் அதிகரித்து வருவது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். மேலும், கடலூர் மாவட்டத்தில் சூறைக்காற்றில் வாழைகள் முறிந்து சேதமடைந்ததை அடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், என தெரிவித்தார்.

  • Tamil actress Sana Khan updates பிரபல நடிகை மீண்டும் கர்ப்பம்..கோலிவுட்டில் பரபரப்பு..!
  • Views: - 288

    0

    0