குவாரிகளை அரசிடம் ஒப்படைக்க தயார் : கோவை ஆட்சியரிடம் கிரஷர் மற்றும் குவாரி சங்கத்தினர் மனு!!
Author: Babu Lakshmanan30 June 2023, 10:01 pm
தமிழக கிரசர் மற்றும் குவாரி உரிமையாளர்கள் கோவை மாவட்ட கலெக்டரை அவரது சந்தித்து போராட்டம் தொடர்பாக கோரிக்கை மனு அளித்தனர்.
KCP INFRA LIMITED நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் , கிரஷர் மற்றும் குவாரி Welfare Association தலைவருமான கே சந்திரபிரகாஷ், நிர்வாகிகள் அம்மாசையப்பன், செல்வராஜ் , நந்தகுமார், பழனிச்சாமி மற்றும் கிரஷர் , குவாரிகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் சந்தித்து பேசினார்.
அப்போது சங்க நிர்வாகிகள் தரப்பில், இதுவரை நடத்தப்பட்டு வரும் போராட்டம் தொடர்பாக தமிழக அரசு, கனிம வளம் மற்றும் புவியியல் துறை எந்த பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை. கோரிக்கைகளை பரிசீலிக்க தீர்வு காண முயற்சிக்கவில்லை.
குவாரி மற்றும் கிரசர்களில் பல ஆயிரம் டிப்பர் லாரிகள், ஜேசிபி , பொக்லைன் போன்ற வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
5 நாட்களில் மாநில அளவில் சுமார் 7000 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் மோசமான சூழல் அதிகமாகிவிடும். உரிமம் பெறாத குவாரிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை உரிமம் பெற்ற குவாரிகள் மீதும் மேற்கொள்ளப்படுகிறது. குவாரிகளில் ஆய்வு செய்ய எந்தவித தடையும் இல்லை, என்றனர்.
இதைத் தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய KCP INFRA LIMITED நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் , கிரஷர் மற்றும் குவாரி சங்கத் தலைவர் கே. சந்திர பிரகாஷ், அரசு உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒரு வாரத்தில் குவாரிகளை அரசிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டிய சூழல் வந்து விடும்.
போராட்டம் நடத்தி காத்திருந்து தொடர்ந்து ஏமாற்றம் மட்டுமே கிடைத்திருக்கிறது. நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பல கோடி அபராதம் போடுகிறார்கள்.
திருச்சியில் குவாரி உரிமையாளர் பழனியாண்டி என்பவருக்கு 20 கோடி ருபாய் அபராதம் போடப்பட்டது. கரூரில் 4 கல் குவாரிகளுக்கு 45 கோடி ரூபாய் அபராதம் போடப்பட்டது. ஒரு ஆட்டோக்காரருக்கு விதிமுறை மீறி விட்டார் என 50 லட்ச ரூபாய் அபராதம் போட்டால் அவர் எப்படி தொழில் செய்வார்.
குவாரி தொழிலில் இதுபோன்ற நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம்.இப்படி இருந்தால் குவாரிகளை அரசிடம் ஒப்படைப்பதை தவிர வேறு வழியில்லை. அரசு இந்த பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணவேண்டும் என அவர் கூறினார்.