ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டம் ; கட்டுமான பணிகள் பாதிக்கும் அபாயம்!!
Author: Babu Lakshmanan1 July 2023, 5:46 pm
திருப்பூர் மாவட்டத்தில் ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் 6வது நாளாக கல்குவாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வேலை நிறுத்தத்தில் 500க்கும் மேற்பட்ட ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும், கற்கள் விற்பனையும் முற்றிலும் நிறுத்தப்படுவதால் கட்டுமான பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு கல் குவாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேலை நிறுத்தத்திற்கு சமூக தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி, திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி காங்கேயம் தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட ஹாலோ பிளாக் கூடங்கள் மூடப்பட்டுள்ளது. 10 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாக 1 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும், நாள் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் வரையிலும் உற்பத்தி பாதிப்பு ஏற்பட கூடும் என தெரிவித்தனர்.