வாட்டி எடுக்கும் வறுமை.. பாதியில் படிப்பை நிறுத்திய வளர்ப்பு மகன் ; அரசு உதவ முன்வருமா..? நாற்காலி பின்னும் கண்பார்வையற்ற முதியவர்..!!

Author: Babu Lakshmanan
4 July 2023, 6:05 pm

தான் தத்தெடுத்து வளர்த்து வந்த பிள்ளையின் பொறியியல் படிப்பை வறுமை காரணமாக கைவிட்டதாகவும் தான் இதனால் மனவேதனையில் உள்ளதாகவும், அரசு படிப்பை தொடர உதவி புரிய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார் 43 ஆண்டுகளாக நாற்காலி பின்னும் கண் பார்வையற்ற முதியவர்.

கண் பார்வை என்பது பிரபஞ்ச ஒளி, கண் பார்வையற்ற மனிதர்கள் எல்லையற்ற பிரபஞ்சத்தை தாண்டியும் கற்பனை கனவுகளை தன்னுள் அடக்கி வைத்துள்ளனர். இதனால் பார்வையற்ற மனிதர்கள் தனி திறன் கொண்டவர்களாக உள்ளனர். எனினும், இவர்கள் சந்திக்கக்கூடிய வேதனை சொல்லி மாளாது. ஆனாலும் தன் சுய வேலைகளை தானே செய்யும் பல்லாயிரக்கணக்கான கண் பார்வையற்றோர் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.

அதில் ஒருவராக மதுரை மாவட்டம் ஆராதுறை கிராமத்தை சேர்ந்த கண் பார்வையற்ற நாற்காலி பின்னும் தொழிலாளி ராஜா என்பவர் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மர நாற்காலிகளில் இருக்கை பின்னும் பணியில் ஈடுபட்டுள்ளார். அவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக மாடியில் தற்போது இந்த பணியில் ஈடுபட்டு வருகிறார்.

கண் பார்வையற்ற ஒரு மனிதர் எவரின் துணையும் இல்லாமல் நாற்காலியில் இருக்கை ஒயர் பின்னும் பணியில் ஈடுபட்டு வந்தார். அவரிடம் விசாரித்த போது தனக்கு ஏழு வயது இருக்கும் போது மூளை காய்ச்சலால் தனது கண் பார்வை இழந்ததாகவும், பின்னர் கண் பார்வை முழுவதும் இழந்த நிலையில், எட்டாம் வகுப்பு வரை படித்து முடித்து, மதுரை தமிழ்நாடு அரசு கண் பார்வையற்றோர் பள்ளியில் சேர்ந்து நாற்காலி பின்னும் தொழில் கற்றதாகவும், அதன் பிறகு கடந்த 43 ஆண்டுகள் நாற்காலி பின்னும் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து, தான் திருமணம் செய்து கொள்ளவில்லை எனவும், தனது அண்ணன் மகனை தத்தெடுத்து வளர்த்து வருவதாகவும், அவரை தற்போது பொறியியல் படிப்பு வரை படிக்க வைத்த நிலையில், பொருளாதாரம் கருதி படிப்பை கைவிட்டு உள்ளதாகவும், வேதனையுடன் தெரிவித்தார்.

தான் தொடர்ந்து இந்த நாற்காலி பின்னும் பணி செய்ய அரசு உதவி புரிய வேண்டும் எனவும், தனது வளர்ப்பு மகனின் பொறியியல் படிப்பை முடிப்பதற்கும், மேற்கொண்டு படிக்க வைப்பதற்கு அரசு முன்வர வேண்டும் எனவும் கண்பார்வையற்ற மதுரையை சேர்ந்த நாற்காலி பின்னும் தொழிலாளி ராஜா வேதனையுடன் தெரிவித்தார். மேலும் மாதம் ஒவ்வொரு ஊராக சென்று நாற்காலி பின்னும் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

  • Tom Holland and Zendaya gets engaged SPIDER MAN ரீல் ஜோடி ரியல் ஜோடியாகிறது.. முடிவுக்கு வந்த 4 வருட டேட்டிங்!
  • Views: - 356

    0

    0