போலீஸ் வாகனம் மோதி 8 வயது சிறுமி பலி… வெளியானது சிசிடிவி காட்சி… உடலை வாங்க மறுத்த உறவினருக்கு மிரட்டல்..? காவலர் மீது வழக்குப்பதிவு
Author: Babu Lakshmanan6 July 2023, 5:54 pm
திருப்பூரில் காவல்துறையினரின் வாகனம் போது சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் காவல்துறையினர் உடலை பெற்றுக்கொள்ள மறுத்த உறவினர்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருப்பூர் காங்கேயம் சாலையில் நேற்று போலீஸ் வாகனத்தை இயக்கி இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் சிறுமி திவ்யதர்ஷினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக முதற்கட்டமாக வீரசின்னன் மீது 304A பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அஜாக்கிரதையாக வாகனம் இயக்கி விபத்து மற்றும் மரணம் விளைவித்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த வீரசின்னன் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் விசாரணையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இதில், திவ்யதர்ஷினி மற்றும் அவரது தாய் ராஜேஸ்வரி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, திவ்யதர்சனியின் பள்ளி பை கீழே விழுந்த போது நிலை தடுமாறிய ராஜேஸ்வரி இருசக்கர வாகனத்தோடு கீழே விழுந்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக பின்னால் வேகமாக வந்த காவல்துறையினரின் வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.
சிறுமி திவ்யதர்சனியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனை நிறைவடைந்து, உடலை பெற்றுக்கொள்ள காவல்துறையினர் தங்களை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், ஆனால் குழந்தையின் தாய் ராஜேஸ்வரி படுகாயங்களுடன் கோவை தனியார் மருத்துவமனையிலும், தந்தை குவைத்தில் இருக்கக்கூடிய நிலையில், தாங்கள் எப்படி உடலை பெற்றுக் கொள்ள முடியும் எனவும், அதனால் தந்தை வரும் வரை உடலைப் பெற்றுக் கொள்ள மாட்டோம் என தெரிவித்தனர்.
காவல்துறையினர் தங்களை உடலை பெற்றுக்கொள்ள தொடர்ந்து மிரட்டி வருவதாகவும், இதுவரை காவலர் வீர சின்னன் மது போதையில் இருந்ததாக தெரிவித்த குற்றச்சாட்டுக்கு காவல்துறை விளக்கம் அளிக்கவில்லை எனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்து உடலை வாங்க மறுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தந்தை வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பி வர தூதரகத்தின் மூலம் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும், இன்று இரவு அவர் குவைத்தில் இருந்து இந்தியா புறப்படுவார் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.