டிஐஜி விஜயகுமார் மரணத்தில் விசாரணை தேவை : தமிழக அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்!!
Author: Udayachandran RadhaKrishnan7 July 2023, 11:20 am
கோவை சரக டிஐஜி விஜயகுமார் தனது காவலாளி துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். தற்போது அவரது உடல் உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
உயர் பதவியில் இருக்கும் காவல்துறை அதிகாரியின் தற்கொலை சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த தற்கொலைக்கான காரணம் குறித்து தற்போது காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது கருத்துகளை பதிவிட்டுள்ளார், தனது ட்விட்டர் பதிவில், கோவை சரக டிஐஜி திரு விஜயகுமார் ஐபிஎஸ் அவர்கள், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்காக ஓய்வு பெற்ற நீதியரசர் திரு சி.டி. செல்வம் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கை என்ன ஆனது?
காவல்துறையினரின் பணிச்சுமையை குறைக்க, தமிழக காவல்துறையில் உள்ள 10,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த நடவடிக்கைகள் என்ன?
காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவரின் தற்கொலை என்பது அத்தனை எளிதாகக் கடந்து செல்ல முடியாது. இந்த தற்கொலைக்கு பின்னணி என்ன என்று, தமிழக அரசு, தீவிர விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க
தமிழக பாஜக சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன் என அவர் பதிவிட்டுள்ளார்.