வாக்குவங்கி அரசியலை மனதில் வைத்து பொதுசிவில் சட்டத்திற்கு எதிர்ப்பா? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மைத்ரேயன் கண்டனம்!

Author: Udayachandran RadhaKrishnan
8 July 2023, 2:11 pm

கூடிய விரைவில் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயம் என முன்னாள் எம்.பி. மைத்ரேயன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- இந்தியா என்பது பன்முகத் தன்மை கொண்ட நாடு. பாரத நாட்டில் குற்றவியல் சட்டங்களும், தண்டனைகளும் அனைவருக்கும் பொதுவானவை.

ஆனால் திருமணம், விவாகரத்து, வாரிசு, சொத்துப் பகிர்வு, தத்தெடுப்பு போன்ற உரிமையியல் சட்டங்கள் சாதி, மத, இன, கலாச்சாரத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.

உதாரணமாக, இஸ்லாமியரகளுக்கான தனிச் சட்டத்தில் நான்கு திருமணம் செய்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சீக்கிய மதச் சட்டப்படி அவர்கள் குறுவாள் வைத்திருக்கலாம், தாடி வைத்துக் கொள்ளலாம், டர்பன் அணியலாம். இதேபோல இந்துக்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தால் வரிச்சலுகைகள் உண்டு. குழந்தைகளைத் தத்தெடுக்கவும், ஜீவனாம்சம் பெறவும் வழிவகை உண்டு.

இவற்றையெல்லாம் தவிர்த்து விட்டு, திருமணம், விவாகரத்து, வாரிசு, சொத்துப் பகிர்வு, தத்தெடுப்பு உள்ளிட்ட பல விவகாரங்களுக்கு பொதுவாக சட்டம் இயற்றுவது என்பதுதான் பொது சிவில் சட்டம்.

இந்த பொது சிவில் சட்டம் குறித்து டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் அவர்களால் வடிவமைக்கப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டம் உறுப்பு 44 ல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, ” குடிமக்களுக்கு ஒரே சீரான உரிமையியல் தொகுப்புச் சட்டம்: குடிமக்கள் அனைவரும் இந்திய ஆட்சி நிலவரை எங்கணும் ஒரே சீரான உரிமையியல் தொகுப்புச் சட்டத்தினை எய்திடச் செய்வதற்கு அரசு முனைந்து முயலுதல் வேண்டும் ” என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் இந்திய அரசமைப்புச் சட்டம் வடிவமைக்கப்பட்டு 73 ஆண்டுகள் கடந்தும், பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதே சமயம் பாரதிய ஜனதா கட்சியின் ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் இது வாக்குறுதியாக இடம் பெற்றுள்ளது. இதனை நடைமுறைப்படுத்தும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அண்மையில் மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசி உள்ளார்.

இது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும். பொது சிவில் சட்டம் குறித்து பிரதமர் அவர்கள் பேசியவுடன், வழக்கம் போல இதனை எதிர்த்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது கருத்தினை பதிவு செய்கிறார்.

பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டால், இஸ்லாமியப் பெண்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்பதை மறந்து, முதல்வர் ஸ்டாலினும், திமுக கூட்டணிக் கட்சிகளும் வாக்குவங்கி அரசியலை மனதில் வைத்து இவ்வாறு பேசுவது கண்டனத்திற்குரியது.

இவர்கள்தான் இப்படி பேசுகிறார்கள் என்றால், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனாசாமி அவர்களும் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பது வருத்தமளிக்கிறது. மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக 2003 ம் ஆண்டே குரல் கொடுத்தவர் என்பதை இங்கு நினைவு படுத்துகிறேன். தற்போது இந்திய சட்ட ஆணையம் பொது சிவில் சட்டம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளை கேட்டு இருக்கிறது. இதன் அடிப்படையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான பாஜக மத்திய அரசு இதனை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும். கூடிய விரைவில் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயம் என மைத்ரேயன் கூறியுள்ளார்.

முதலமைச்சரிடம் ஒன்றே ஒன்று கேட்க விரும்புகிறேன். தமிழக அமைச்சர்களாகப் பொறுப்பேற்க, குறிப்பிடத்தக்க தகுதிகள் வேண்டும் என்று தமிழக மக்கள் நிபந்தனை விதித்திருந்தால், உங்கள் கட்சியின் நிலைமை என்னவாக இருந்திருக்கும்? இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!