அரசு ஒப்பந்தப் பணிகளுக்கு இ-வங்கி உத்தரவாதம் ; புதிய நிபந்தனையை எதிர்த்து வழக்கு… நெடுஞ்சாலைத்துறைக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு
Author: Babu Lakshmanan11 July 2023, 1:58 pm
அரசு ஒப்பந்தப் பணிகளுக்கு இ-வங்கி முறையில் உத்தரவாதத் தொகையை செலுத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
எந்த ஒரு அரசு துறைகளில் ஒப்பந்தம் எடுப்பதாக இருந்தாலும் ஒப்பந்த மதிப்பில் ஒரு சதவீத தொகையை முன்வைப்புத் தொகையாக வங்கி வரைவோலையாகவோ அல்லது நிரந்தர வைப்புத் தொகையாகவோ அல்லது வங்கி உத்தரவாதமாகவோ அளிக்கும் நடைமுறை இதுவரை பின்பற்றப்படுகிறது.
ஆனால், தற்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் கோரப்படும் அனைத்து ஒப்பந்த பணிகளுக்கும் ஒப்பந்ததாரர்கள் முன்வைப்பு தொகையை ‘இ-வங்கி’ உத்தரவாதம் மூலமாக மட்டுமே செலுத்த வேண்டுமென புதிதாக நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இ-வங்கி உத்தரவாத நடைமுறை பல வங்கிகளில் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை. குறிப்பிட்ட ஒரு சில வங்கிகளில் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது.
இதனால், தேசிய நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களில் பங்கேற்க விரும்பும் தகுதியான ஒப்பந்ததாரர்கள் இந்த புதிய நடைமுறையினால் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை ஒப்பந்த பணிகளுக்கான வெளிப்படைத்தன்மையும் கேள்விக்குறியாகி உள்ளது.
எனவே, புதிய நடைமுறையுடன், பழைய நடைமுறையையும் சேர்த்து டெண்டர் கோர தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் KCP Infra Limited நிறுவனத்தின் நிறுவனரும், மேலாண்மை இயக்குநருமான கே. சந்திரபிரகாஷ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நேற்று நீதிபதி என்.சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை கூடுதல் செயலர், சூப்பிரண்டு என்ஜினீயர் ஆகியோர்பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை 12ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.