முன்னாள் கருவூல கணக்காளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை… ரூ.500 லஞ்சம் பெற்ற வழக்கில் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அதிரடி!!
Author: Babu Lakshmanan14 July 2023, 12:07 pm
திருச்சி ; திருச்சியில் லஞ்சம் பெற்ற வழக்கில் முன்னாள் கருவூல கணக்காளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தார்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரி அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றியவர் சோ.நல்லையன். இவர் தனது பணிமுதிர்வின் போது, அவரது கணக்கில் இருக்கும் விடுப்பை பணமாக்க கோரி திருச்சி மாவட்டம், லால்குடி, சார்நிலை கருவூலத்தில் கணக்கராக பணியாற்றிய கிருஷ்ணமூர்த்தியை அணுகியுள்ளார்.
இதற்கு கிருஷ்ணமூர்த்தி ரூ.500 லஞ்சம் கேட்டதால், லஞ்சம் கொடுக்க விரும்பாத சோ.நல்லையன் இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து, கடந்த 17.03.2008 ஆம் தேதி லஞ்சப் பணத்தை பெறும் பொழுது கிருஷ்ணமூர்த்தி கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கானது திருச்சி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
விசாரணை முடிவுற்று இன்று திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் சமயபுரம், சார்நிலை கருவூலம் முன்னாள் கணக்காளர் கிருஷ்ணமூர்த்திக்கு லஞ்சப்பணம் கேட்டுப்பெற்ற குற்றத்திற்காக ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.10,000/- அபராதமும். அபராதத்தை கட்ட தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனையும், அரசு பதவியை தவறாக பயன்படுத்தி கையூட்டு கேட்டுப்பெற்ற குற்றத்திற்காக 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10,000/- அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனையும் விதித்ததோடு, மேற்கண்ட தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.