காணாமல் போன காஞ்சிபுரம் பிரபல தாதாவின் உறவுக்கார இளைஞர்.. 6 மாதம் கழித்து எலும்புக்கூடாக மீட்பு : அதிர்ச்சி சம்பவம்!
Author: Udayachandran RadhaKrishnan14 July 2023, 9:59 pm
காஞ்சிபுரத்தில் பிரபல தாதாவாக வலம் வந்து பின்னர் கம்போடியா நாட்டில் சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டவர் பிரபல தாதா ஸ்ரீதர் தனபால் என்பவர்.
இவருடைய மனைவி குமாரி. 18 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீதர் தனபாலால் குமாரியின் “மூத்த சகோதரி பாக்கியம்” என்பவர் கொல்லப்பட்டார்.
குமாரியின் உடன் பிறந்த மூத்த சகோதரி பாக்கியம் என்பவரின் மகன் கிரிதரன் (29). இவர் தன்னுடைய சகோதரி கிரிஜா கட்டுப்பாட்டில் பல்லவர் மேடு பகுதியில் வசிக்கிறார். கிரிதரன் மீது பல்வேறு காவல்நிலையங்களில் அடிதடி உள்ளிட்ட 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் தனது நண்பர்கள் ஹரீஸ் என்ற டியோ ஹரி வயது 20, பிட்டா என்ற கார்த்திக் (18), ஆகாஷ் (18), மற்றும் தாமோதரன் (19) ஆகியோருடன் சேர்ந்து கடந்த ஜனவரி மாதம் 13 ஆம் தேதி புதுப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் மது அருந்திக் கொண்டிருந்தனர்.
மது போதையில் அவர்களுக்குள் யார் பெரியவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆகாஷ் மற்றும் பிட்டா கார்த்திக் ஆகிய இருவரும் சேர்ந்து அங்கிருந்து கல்லை தூக்கி கிரிதரன் மீது போட்டுள்ளனர்.
ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த கிரிதரன் உயிருக்கு போராடிய நிலையில் அங்கிருந்த மற்றொரு பாரங்கல்லை தூக்கி கிரிதரன் மீது ஹரீஸ் போட்டதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து கிரிதரன் இறந்து போனார்.
கிரிதரனின் உடலை யாரும் கண்டுபிடித்து விடக் கூடாது என்று எண்ணிய அந்தக் கொலைக்கார இளைஞர்கள் இறந்து போன கிரிதரனின் உடலில் பெரிய பாறாங்கல்லை வைத்து அந்தப் பகுதியில் கிடந்த சேலைகள் மற்றும் துணிகளை எடுத்து உடலில் நன்றாக கட்டி அருகே இருந்த பாழ்யடைந்த கிணற்றில் போட்டனர்.
அது மட்டுமல்லாமல் சடலம் நீருக்கு மேல் வந்துவிடக் கூடாது என்று எண்ணிய அந்த கும்பல் அங்கிருந்த தென்னை மரத்தை வெட்டி கிணற்றில் போட்டனர். அதேபோல் அங்கிருந்த சில மரங்களையும் கிளைகளயும் வெட்டி எடுத்து, “கிணற்றில் தண்ணியே தெரியாத” அளவுக்கு போட்டு மறைத்தனர்.
பின்னர் ஒன்றும் தெரியாதது போல் அனைத்து நண்பர்களும் கடந்த ஆறு மாதமாக அவர்களுடைய அன்றாட வேலைகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தன்னுடைய தம்பி ஜனவரி மாதம், போகிப் பண்டிகையிலிருந்து காணவில்லை என கிரிதனின் உடன் பிறந்த அக்கா கிரிஜா சிவகார்த்திகேயன் காவல் நிலையத்தில் பிப்ரவரி மாதம் புகார் அளித்துள்ளார்.
எப்போதும் போல் அந்தப் புகார் மனுவை காணாமல் போனவர்கள் கணக்கில் சேர்த்து விட்டு அலட்சியமாக இருந்துவிட்டனர். கடந்த ஒன்றரை மாதமாக அந்த பகுதி இளைஞர்கள் மத்தியில் ஒரு நபர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசி வீசப்பட்டுள்ளார் என்ற தகவல், அரசல்புரசலாக கசிந்து வந்தது. அதன் அடிப்படையில் ஒரு சில காவலர்கள் அந்தப் பகுதியில் உள்ள கிணற்றை சுற்றி பார்த்துவிட்டு ஒன்றுமில்லை என அமைதியாக இருந்து விட்டனர்.
இந்நிலையில்தான் கொலை செய்த இளைஞர்களில் ஒரு சிலர் பந்தாவாக, நாங்கள் எல்லாம் சாதாரண ஆட்கள் இல்லை, கிரிதரனையே கொலை செய்து கிணற்றில் போட்டு விட்டோம் என தங்களுடைய சக நண்பர்களிடம் பேச்சுவாக்கில் உளறி கொட்டியுள்ளனர்.
இதை மோப்பம் பிடித்த மாவட்ட தனிப்படையினர் ஹாரிஸ் என்ற டியோ ஹரியை நேற்று இரவு பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கிரிதரனை கொலை செய்து கிணற்றில் போட்டு மரக்கிளைகளை போட்டு மூடி விட்டோம் என தெரிவித்துள்ளனர்.
டியோ ஹரி கொடுத்த தகவலை அடுத்து இன்று காலை டிஎஸ்பி ஜூலியர் சீசர் தலைமையில் 20 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குற்றவாளியை அழைத்து வந்து கொலை செய்த இடத்தை காண்பிக்க செய்து கொலையை உறுதி செய்தனர்.
அதன் பிறகு டியோ ஹரி கொடுத்த தகவலின் பேரில் ஆகாஷ், பிட்டா என்ற கார்த்திக் மற்றும் தாமோதரன் ஆகியோர்களை கைது செய்து காவல்துறையினர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
அந்த கிணற்றில் தீயணைப்புத்துறை மற்றும் வருவாய்த்துறையினரின் உதவியுடன் சிவகாஞ்சி காவல் துறையினர், தேடிய போது மண்டைஓடு மற்றும் கால் எலும்பு மட்டுமே கிடைத்து. அதனால் கழிவு நீர் உறிஞ்சும் வாகனத்தை கொண்டு வந்து கிணற்றில் உள்ள தண்ணீர் முழுவதையும் உறிஞ்சி எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு சில நாளாக விட்டு விட்டு பெய்து வரும் மழையின் காரணமாக அந்த கிணற்றில் நீர் ஊற்று வந்து கொண்டே உள்ளதால் சடலத்தின் மற்ற பாகங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் நாளையும் இந்தப் பணி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போதையில் உடன் பழகிய நண்பரையே சக நண்பர்கள் கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கிரிதரின் உறவினர் ஒருவர் கூறும்போது, காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நாளே இதைப் பற்றி தீவிர விசாரணை செய்திருந்தால் எங்கள் உறவுக்கார பையனின் சடலமாவது கிடைத்திருக்கும். இப்போது எலும்பு மட்டுமே உள்ளதாக காவல்துறை தெரிவிக்கின்றனர். காவல்துறை இவ்வளவு அலட்சியமாக இருக்கக் கூடாது என வருத்தத்துடன் கூறினார்.