ஆடி மாத சீர்வரிசையில் இடம்பிடித்த தக்காளி.. வியப்பை ஏற்படுத்திய பெண் வீட்டாரின் சீர்வரிசை!

Author: Babu Lakshmanan
15 July 2023, 4:08 pm

தக்காளி விலை விண்ணை முட்டும் வகையில் உயர்ந்து வரும் நிலையில், வேலூரில் பெண் வீட்டார் ஒருவர் ஆடி மாத சீர்வரிசையில் தக்காளி இடம்பெறச் செய்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தைச் சேர்ந்த கனிஷ்குமாருக்கும், பள்ளிகொண்டாவை சேர்ந்த லீலா பிரியாவுக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. புதிதாகத் திருமணமான, ஓராண்டுக்கு உள்ளான, மணப்பெண்ணைத் தாய் வீட்டார் சீர்வரிசை வைத்து மணமகன் இல்லத்திலிருந்து தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்வது வழக்கம்.

ஆடி மாதம் முடியும் வரை தாய் வீட்டில் வைத்திருந்து, பிறகு ஒரு நல்லநாள் பார்த்து புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள். அந்த வகையில் லீலா பிரியாவின் பெற்றோர் ஆடி மாதம் சீர்வரிசை வைத்து லீலா பிரியாவையும், மருமகனையும் தங்கள் வீட்டுக்கு அழைத்து செல்ல திட்டமிட்டனர்.

அதாவது, 25 வகையான பொருட்களை சீர்வரிசையாக வைத்தனர். அதில் மாம்பழம்,திராட்சை, இனிப்பு பலகாரங்கள், தேங்காய் வரிசையில் தக்காளிப் பழத்தையும் மதிப்பிற்குரியதாக வைத்து பெண்ணை அழைத்துச் சென்றனர். தற்போது ஒரு கிலோ தக்காளி 100 முதல் 200 வரை விற்பனை ஆவதால் மக்கள் மத்தியில் பேசும் பொருளாகிவிட்டது.

இதன் காரணமாக, சீர்வரிசையில் வைக்கப்படும் தக்காளி, புகுந்த வீட்டில் சமையலுக்கு பயன்படும் என்பதால் தக்காளி சீர்வரிசையை புகுந்த வீட்டில் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டனர். உயர்ரக பழங்களுடன் சீர்வரிசை தட்டில் வைக்கப்படும் அளவிற்கு தக்காளிப்பழம், சீர்வரிசை தட்டில் இடம்பெற்றிருந்தது வியப்பாக இருந்தது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 403

    0

    0