இளம்பெண் பலாத்கார வழக்கில் பரபரப்பு திருப்பம் : பாஜக பிரமுகரின் மகன் உட்பட 3 பேர் கைது!!
Author: Udayachandran RadhaKrishnan16 July 2023, 6:52 pm
மத்திய பிரதேசத்தின் தத்தியா மாவட்டத்தில் வசித்து வரும் இளம்பெண் (வயது 19) மற்றும் அவரது இளைய சகோதரியை 4 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றது.
பின்னர் இளம்பெண்ணை அந்த கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. இதனை தடுக்க முயன்ற இளம்பெண்ணின் இளைய சகோதரியை அந்த கும்பல் தாக்கி உள்ளது.
அதிர்ச்சி ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்ச்சியாக அந்த இளம்பெண் தற்கொலைக்கு முயன்று உள்ளார். சம்பவம் பற்றி உனாவ் காவல் நிலைய அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், குற்றவாளிகளில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். 2 மைனர் சிறுவர்களையும் பிடித்து விசாரித்து வருகின்றனர். வழக்கில் தப்பிய மற்றொரு நபரை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு தொகையும் அறிவித்து உள்ளனர்.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர்களில் ஆளும் பா.ஜ.க. நிர்வாகி ஒருவரின் மைனர் மகனும் உள்ளார். அவரது பெயர் எப்.ஐ.ஆர். பதிவில் உள்ளது. இதுபற்றி பா.ஜ.க. மாவட்ட தலைவர் சுரேந்திர புதோலியா கூறும்போது, நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசம் வாய்ந்தது.
பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் வாக்குமூலங்களை போலீசார் இன்னும் பெறவில்லை. அவர் தனது வாக்குமூலத்தில் பா.ஜ.க. நிர்வாகியின் மகனின் பெயரை போலீசாரிடம் கூறினால், நிர்வாகிக்கு கட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்படும். அதன்பின்னர் கட்சி சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என புதோலியா கூறியுள்ளார்.