பின்னோக்கி செல்லும் தமிழகம்… முதலமைச்சர் ஸ்டாலின் பெங்களூரூக்கு போனதே இதுக்கு தான்.. முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் காட்டம்..!!
Author: Babu Lakshmanan17 July 2023, 1:06 pm
9 மாத இடைவெளியில் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் மின் கட்டணங்களை உயர்த்தியதால் தொழிற்சாலைகள் அண்டை மாநிலங்களுக்கு செல்வதை அரசு கைகட்டி அரசுவேடிக்கை பார்ப்பதாக ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- இன்றைக்கு முதலமைச்சர் வெறும் விளம்பரத்தால் மட்டுமே விழா நடத்தி நாட்களையும், காலங்களையும் வீணடித்துக் கொண்டிருக்கிறார் என்று நாடு முழுவதும் மக்கள் புலம்பி கொண்டு இருப்பது மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு சென்றதா என்று தெரியவில்லை? 2021ல் ஆட்சி பொறுப்புக்கு வருவதற்காக நிறைவேற்ற முடியாத 520 வாக்குறுதிகளை அள்ளி, அள்ளி இந்த நாட்டு மக்களுக்கு தந்திட்ட திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு, அந்த தேர்தல் வாக்குறுதி குறித்து வாய் மூடி மௌனியாக இருக்கிறது கேட்டால், 80 சதவீதம் நிறைவேற்றி விட்டோம் என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல நிறைவேற்றப்படாத திட்டங்களை எல்லாம் நிறைவேற்றியதாக விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
விளம்பரத்தால் இன்றைக்கு விடியா திமுக அரசு நாட்களை நகர்த்தி கொண்டிருக்கிறது. வெற்று விளம்பரங்களால் மட்டுமே காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறது இந்த திராவிட முன்னேற்ற கழக அரசு. மக்களுக்கு வளர்ச்சிக்கான திட்டங்கள் எதுவும் இல்லை, அம்மாவுடைய அரசிலே நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் எல்லாம் தற்போது ரத்து செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
மக்கள் நலம் சார்ந்த திட்டங்களை எல்லாம் மீண்டும் செயல்படுத்திட கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் தொடர்ந்து தமிழக மக்களுக்காக உரிமைக்குரல் எழுப்பி வருகின்றார்கள். ஆனால், இந்த அரசு செவிடன் காதில் ஊதிய சங்கு போல மக்கள் உரிமைக்கான உரிமைக்குரலை கேட்க மறுக்கிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாளிலிருந்து மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர்கட்டண உயர்வு, கழிவு நீர் இணைப்பு கட்டணங்களை உயர்த்தி, மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கை நடத்துவதற்கு கூட இன்றைக்கு மிகுந்த சிரமப்படுகின்ற ஒரு சூழ்நிலையை இந்த தமிழ்நாட்டில் உருவாக்கி இருக்கிற பெருமை விடியா திமுக அரசுக்கு உண்டு.
இந்த நிலையில், இரண்டாவது முறையாக 9 மாத இடைவெளியில் வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலையின் மின் கட்டணங்களை உயர்த்தியதால் அண்டை மாநிலங்களுக்கு தொழிற்சாலைகள் செல்கின்றன. இதை கைகட்டி அரசு வேடிக்கை பார்க்கிறது. சட்ட ஒழுங்கு சீர்கெட்டு அமைதிபூங்காவாக இருந்த தமிழகம் அமளிக்காடாக மாறிவிட்டது. இதனால் இன்றைக்கு தொழிற்சாலைகளின் முதலீடுகள் இங்கே வருவது தடை ஏற்பட்டு இருப்பதை, திமுக அரசு மறைத்து விளம்பரத்தால் வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டிருக்கிறது.
அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், பீன்ஸ், அவரைக்காய், கேரட் உள்ளிட்ட காய்கறியின் விலைகளும், துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, சீரகம்,புளி உள்ளிட்ட மளிகை பொருட்கள் தார்மாராக விலை உயர்வால் ஏழை மக்கள் மிகவும் தவித்து வருகிறார்கள். இதை எல்லாம் சீர்படுத்தாத, செம்மைப்படுத்தாத அரசாக திமுக அரசு உள்ளது. தமிழ்நாடு மக்கள் வேதனைப்படும் நேரத்தில், தவறாமல் முதலமைச்சர் தனது தந்தையார் பெயரில் நூலகம், கோட்டம் திறந்து வருகிறார்.
தமிழக மக்களின் வளர்ச்சிக்கும், வாழ்வாதாரருக்கும், ஜீவாதார உரிமைக்கும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இது இப்படி இருக்க பெங்களூரில் கூட்டணி கட்சி நிகழ்ச்சியில், இந்திய நாட்டில் தலைவர்கள் மத்தியில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள ஸ்டாலின் முயன்று வருகிறார். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டத்திற்கு வழிகாட்டும் கதையை போல முதலமைச்சர் செயல்பாடு உள்ளது என்று மக்கள் பேசுகிறார்கள். திமுக ஆட்சியில் மக்கள் வேதனை படாத நாட்களே இல்லை, நிச்சயம் வேதனை காலம் போகி நல்ல காலம் எடப்பாடியார் தலைமையில் விரைவில் வரும், என குறிப்பிட்டுள்ளார்.