சமூகநீதி பற்றி பேசுங்க.. குடிநீதி பற்றி பேசக் கூடாது : அமைச்சர் முத்துசாமிக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 July 2023, 8:14 pm

சமூகநீதி பற்றி பேசுங்க.. குடிநீதி பற்றி பேசக் கூடாது : அமைச்சர் முத்துசாமிக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!!

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி பேசுகையில், ”தயவுசெய்து நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். நான் யாரையும் குறை சொல்வதற்காக சொல்லவில்லை. ஆனால் காலையில் குடிப்பவர்களைப் பற்றி குடிகாரன் என்று யாராவது சொன்னால் அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது.

சாக்கடை அடைத்துக்கொண்டு துர்நாற்றம் வந்தால் உடனே உள்ளே போய் விடுகிறோம். அதை கிளீன் செய்வதற்கு யார் வருகிறார்கள்? அப்படிப்பட்டவர்களை ஏன் கேவலப்படுத்துகிறீர்கள். மாற்று வழி என்ன என்று கண்டுபிடியுங்கள். இதுதான் எனக்கு இருக்கின்ற வருத்தம் என கூறியிருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், காலையில் சாக்கடை தூய்மை செய்யும் பணிக்கு செல்பவர்கள் நாற்றத்தை சகித்துக் கொள்ள தவிர்க்க முடியாமல் மது அருந்துகிறார்கள். அவர்களை குடிகாரர்கள் என்று சொல்லக் கூடாது; அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என்று மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி கூறியிருக்கிறார். இதையெல்லாம் எந்த வகை தத்துவத்தில் சேர்ப்பது என்று தெரியவில்லை.

சாக்கடைகளை தூய்மைப்படுத்தும் போது நாற்றத்தை சகித்துக் கொள்ள முடியாது என்பது உண்மை தான். அதற்கான தீர்வு சாக்கடைகளை தூய்மை செய்வது உள்ளிட்ட பணிகளை எந்திரமயமாக்கி, அதில் ஈடுபட்டுள்ள பணியாளர்களை அடுத்தடுத்த நிலையில் உள்ள பணிகளுக்கு உயர்த்துவது தான் சமூக நீதி!

மாறாக, சாக்கடை தூய்மை செய்யும் பணிகளில் உள்ளவர்களுக்கு காலையிலேயே மது கொடுக்க வேண்டும் என்று துடிப்பது மது நீதி. அது மிகவும் ஆபத்தானது.

நாற்றத்தை மறக்க மது தான் தீர்வு என்றால், அதை விட கொடிய நாற்றத்துடன் மதுவை அருந்தி விட்டு வீட்டுக்கு வரும் கணவனை சகித்துக் கொள்ள முடியாமல் மனைவிகள் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு அமைச்சர் என்ன தீர்வு வைத்திருக்கிறார்? என தெரிவித்துள்ளார்.

  • tamannaah dialogue in odela 2 trailer trolled by netizens பூமாதா, கோமாதா… படத்தில் பேசிய வசனத்தால் ட்ரோலுக்குள்ளாகும் தமன்னா…