அதிமுகவினருக்கு குட்நியூஸ்.. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்எஸ் பாரதி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி..!!
Author: Babu Lakshmanan18 July 2023, 12:08 pm
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
கடந்த அதிமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைத்துறையையும் கையில் வைத்திருந்தார். இந்த சூழலில், அதிமுக ஆட்சியின் போது, டெண்டர் ஒதுக்கியதில் ரூ.4,800 கோடி அளவிற்கு முறைகேடு நடந்ததாகவும், இதில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாகவும் கடந்த 2018-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி புகார் அளித்தார்.
இந்தப் புகாரில் எடப்பாடி பழனிசாமியின் உறவினர்கள், சேகர் ரெட்டி உள்ளிட்டோர் மீது ஆர்.எஸ். பாரதி புகார் அளித்தார்.
இதனிடையே, இந்தப் புகார் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ். பாரதி மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் அந்த தீர்ப்பை ரத்து செய்த உச்சநீதிமன்றம் வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.
அதன்படி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு பல கட்டங்களாக விசாரணை நடைபெற்றது.
இந்த நிலையில், இன்று இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையில் குறைபாடு காணமுடியாது என்றும், ஆட்சி மாற்றம் காரணமாக புதிய விசாரணை நடத்த தேவையில்லை என நீதிபதி தெரிவித்தார்.